போர்ச்சூழலில் பெண் -4


சாவோ கடற்கரையில் இளம் நங்கை எனும் பூ-டக்-ஐ என்பாரது நாவல் வியட்நாம் நாட்டில் பிரெஞ்சு ஆதிக்கத்திற்கு எதிராக வடபகுதியில் நடந்த போராட்ட்த்தைக் களமாகக் கொண்ட புனைவு இப்படி போர்க்களம் சிதைத்துவரும் மக்களைக்குறித்து பெண்களே பதிவு செய்துள்ள குறிப்புகள் ,புத்தகங்களாகிக் கொண்டிருக்கின்றன.

பெயரிடாத நட்சத்திரங்கள் எனும் தொகுப்பு 26 போராளிப்பெண்களின் கவிதைகளைத்தாங்கி வந்துள்ளது.மிக முக்கியமான தலைமைப்பொறுப்புகளில் பணியாற்றிய பெண்கவிஞர்கள் இவர்கள்.

கோனேஸ்வரிகளும் மன்னெம்பெரிகளும் போர்க்களத்தில் சூறையாடப்படுவதோடு இன அழிப்பு என்கிற நிலையில் கட்டவிழ்ந்த வன்முறையில் அவர்கள் இனத்தினை தூயமரபு எனக்கூறி பெருமை பேசிவிட முடியாதபடிக்கு இனப்பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்துகின்றனர்.சந்ததியினை ஈன்றுதருகிற பெண்களின் யோனிப்பாதைக்குள் குண்டுகளை வைத்து வெடிக்கச்செய்தனர்.

இனப்பெருமைக்குள் மூழ்கிக்கிடப்பவர்கள் பெண்கள் எழுத்தும் கலையும் பெண்ணுறுப்புகளை அவையங்களை வெளிப்படையாக சித்திரிப்பதை பெண் மொழி கலை என்பதனை விமர்சனம் செய்கிறார்கள்.பெண் எழுத்தாளர்கள் என்றால் காமக்கதைபேசும் கூச்சமற்ற கூட்டமென பரப்புரை செய்து யோனிக்கும் முலைக்கும் பாதுகாவலாக நிற்கிறவர்கள்.வீரம் பொருந்திய பெண் எழுத்துகளை வாசித்திருக்கிறார்களா?அவர்களின் வலிகளை உணர்ந்திருக்கிறார்களா?யோனிப்பாதையை,கருவறையை வெடிக்கச் செய்கிற இனவெறிக்கு எதிராக எத்தனை படைப்புகளைத் தந்திருக்கிறார்கள் .

ஏகாதிபத்தியம் பெண்களைச் சந்தைக்காக நிர்வாணமாக்கினால் மதங்கள் பெண்களைக் காக்க கட்டமைக்கிற பெண்ணுக்கான அத்தனை பண்பாட்டு வழமைகளும் போர்ச்சூழலில் ஏளனத்திற்கு  உள்ளாகிறது என்பதே உண்மை.

பெண்களைப் பொத்திப்பொத்தி பாதுகாக்கிற ஆணாதிக்கம் கட்டமைத்திருக்கிற அத்தனைக் கூறுகளும் வெட்கி தலைகுனிகிறது.ஒழுக்கம் கற்பு என்கிற சொற்கள் அர்த்தமிழக்கின்றன.பெண்கள் தங்களின் பாலுணர்வை வெளிப்படுத்தக் கூடாது .அதைப் பேசக்கூடாதென பின்பற்றப்படுகிற கடுமையான தடைகள் பொடிந்து போகின்றன.வல்லுறவுக்குப் பின்னாக பெண்கள் நாளொன்றுக்கு எத்தனை முறை வல்லுறவை எதிர்கொண்டார்கள் என்பதனை வெளிப்படையாகப் பேசவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.

மதம்,பண்பாடு கட்டமைக்கிற அனைத்தும் ஒரு துளியும் பொருளற்றதாக போர்ச்சூழலில் மாறிவிடுகிறது.இந்நிலையில் மத அடிப்படைவாதிகள் தங்கள் இனப்பெண்களைப் பாதுகாக்கிறதாகக் கருதிக்கொண்டு செய்கிற அத்துணை விடயங்களும் புர்கா,தாலி எனும் சடங்கார்த்தமான அனைத்தும் ஏதுமில்லாமல் போகிறது.கோணேஸ்வரிகளின்  யோனி சிதைப்பை ஆஃப்ரிக்க பெண்ணடிமை பண்பாட்டு மரபான பெண்ணுறுப்பு தைத்தல் காப்பாற்றி விடுமா?

போர்ச்சூழலில் தொடர்ந்து பெண்கள் தங்களையும் குழந்தைகளையும் காத்துக் கொள்வதற்கு சமூக,அரசியல்,பொருளாதாரம் சார்ந்த பொது வெளியில் மேலதிகமாக இறங்க வேண்டிய தேவை இருக்கிறது.இனத்தூய்மைக்காக பொத்திவைக்கிற விதிமுறைகள் செல்லாக்காசாகிறது.தற்போதும் உளவுத்துறைகளில் இராணுவப் படையணியில் பெண்கள் அதிகமாக ஈடுபட்டுவருகின்றனர்.நிலம் அபகரிக்கப்படுவதைப் போன்றே மொழி கலை பண்பாடு உணவு சிதைக்கப்படுவதைப் போன்றே பெண்களும் சிதைக்கப் படுகின்றனர்.

எனதுகுரல்

மாண்டவர்கள் மத்தியில்

மீண்டும் ஒலிக்கும்..

இந்த யுகம் முடிந்து

புதுயுகம் தொடங்கும் போது

எனது வார்த்தை

மீண்டும் உயிர்பெற்றெழும்

இறந்தவர்களின் நினைவாக குவாரானி மக்கள் பாடும் பாடல்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.