ஒர் பெண்ணின் இலங்கைப் பயணம் 2


தங்கிய விடுதியை ஒட்டிய ஓடையின் சலசலப்பு அங்கு நிலவிய அமைதியில் அதிகமாக கேட்டது.குளிர் இருந்தது.அடுத்தநாள் குளித்துக் கிளம்பி ஓடையைப் பார்க்க பட்டிகொலா பகுதியிலிருந்து வந்த ப்ரௌப்பி,யாழினி,யோகிசந்ருவுடன் நானும் கிளம்பினேன்.பல புதிய மலர்களைப் பார்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.அங்கிருந்த இயற்கையை கண்ணுக்குள் பிடித்து வைக்கமுடியவில்லை.மனம் முழுவதையும் அழகு ஆக்கிரமித்தது..கருத்தரங்கம் நடக்கும் இடம் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது நடந்தே செல்லலாமென நாங்கள் வழியெங்கு இயற்கை காட்சிகளை இரசித்து புகைப்படம் எடுத்துக் கொண்டு அவரவர் ஊர் கதைகளைப் பகிர்ந்து கொண்டே நடந்தோம்.

இரண்டுநாள் கருத்தரங்கமும் பெண்களின் சமகால வாழ்க்கை,வேலை வாய்ப்புகள்,அங்கே எதிர்கொள்ளும் சிக்கல்கள்,கல்வி,உயர்கல்வி,மலையக பெண்கள்,முஸ்லிம் பெண்களின் பிரச்சனைகள் என விரிவாக விவாதிக்கப்பட்டது.கலந்துரையாடலின் போது மலையகத்தில் இருக்கும் தோட்டத் தொழிலாளிப் பெண்களைக் குறித்து பேசும் போது அவர்களுக்கு கழிவறை இல்லாமல் சிறுநீர்கழிக்க இயலாமல் மாதவிடாய் காலங்களில் படும் அவஸ்தை குறித்து எல்லா பெண்களும் பேசினார்கள்.ஆங்காங்கே கழிவறைகளை அமைக்கவேண்டுமென தொடர்ந்த விவாதத்தில் நுவரேலியா பகுதியின் எம்.பி யும் தோட்டத்தொழிலாளியின் மகளுமான சரஸ்வதி சிவகுரு பெண்களின் இப் பிரச்சனையை அரசுக்கு கவனப் படுத்துவதாகவும் இவரது மாகாணத்தில் இவரது நேரடிப் பார்வையில் கழிவறைகளை அமைப்பதாகவும் உறுதியளித்தார்

.இரண்டுநாள் அமர்விலும் சரஸ்வதி அவர்கள் பார்வையாளராக மட்டுமே அமர்ந்திருந்தார்.நிகழ்ச்சி நடப்பதை அறிந்து அவராகவே வந்து ஆர்வத்தோடு தன் பங்களிப்பை செய்தார்.தோழி நளினி பெண்களுக்காக தொடர்ந்து செயல் படுபவர் ஜெனிவா வரை சென்று பேசுகிறவர்.அவரும் பார்வையாளராக இருந்து கலந்துரையாடலில் பங்கேற்றார்.மேலைநாடுகளில் பேசக்கூடியதான பெண்களுக்கான உரிமைகள் பற்றிப் பேசுகிற பெண்கள் சந்திப்பாக இல்லாமல் மண்சார்ந்த உழைக்கும் பெண்கள்,அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மையமாக இருந்த்து.முஸ்லிம் பெண்களின் கருத்துரைகளும் ஆழமாக விவாதிக்கப் பட்டது.கலந்துரையாடலில் குரான் கூறும் கருத்து பெண்களுக்கு முக்கியத்துவம் தருவதாகவும் நடைமுறையில் அவை மாற்றப் பட்டிருப்பதையும் பேசினார்கள்.இப்படி விவாதித்த முஸ்லிம் தோழிகள் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் பணியாற்றி வருகிறவர்கள்.

இந்த இரண்டு நாட்களிலும் புதுப் புது விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது.சம்பல் என்று துருவிய தேங்காயோடு மிளகாய் எலுமிச்சை சாறு உப்பு வைத்து இடித்ததை ப்ரட் க்கு வைத்து சாப்பிடுகிறார்கள்.அது மட்டுமல்லாமல் சில குழம்புவகைகளை வைத்தும் காலை இரவு நேரங்களில் பிரட் மட்டுமே சாப்பிடுகிறார்கள்.இது பாரம்பரிய உணவு முறையாக இல்லாவிட்டாலும் வழக்கத்தில் இதுதான் இருக்கிறது.தோட்டங்களில் வேலைபார்க்கும் பெண்கள் அதிகாலையில் சென்றுவிடுவதும்.இரவு நேரங்களில் சமைக்க முடியாமல் போவதாலும் பிரட் ,பன் சாப்பிடும் வழக்கம் உண்டாகியிருக்கிறது.மாசி கருவாடு வைத்தும் சம்பல் செய்கிறார்கள்.

பெண்கள் சந்திப்பு முடிந்த அடுத்த நாள் காலை தோழி சிறி வீட்டில் அடையும் உப்புமாவும் சாப்பிட்டுவிட்டு நெகிழ்வோடு கிளம்பினோம்.மலை இறங்கத் துவங்கினோம்.மூன்றுமணி நேர பயணத்தில் தோழி லறீனாவின் வீட்டில் மதிய உணவு காத்திருந்தது.தொடர்ந்து முஸ்லிம் பெண்களுக்காக எழுதுகிற தோழி லறீனா வீட்டில் நெய்சோறு ,கோழி இறைச்சி,அன்னாச்சிப்பழ கறி.உருளைக்கிழங்கு மசால்,கேரட் பச்சடி,வட்டப்பம் என அன்போடு போதும் போதும் எனும் அளவு பறிமாறினார்கள்.அன்னாச்சிக் கறியும் வட்டப்பமும் நான் முதல் முதலில் ருசிக்கிறேன்.இரண்டுமே அத்தனை சுவையாக இருக்கிறது.உங்களுக்காக அடுத்த இதழில் சமைக்கும் முறையையும் சொல்கிறேன்.அங்கிருந்து  யாழ்ப்பாணம் நோக்கி பயணித்தோம் .

தம்புலா புத்தர் கோவிலைப் பார்த்தோம்.மிக உயரமான புத்தர் சிலை அவருக்கு பின்பான மூலஸ்தானத்தில் புத்தரின் கிடந்த கோலத்தைப் பார்த்தோம்.வேன் வவுனியாவை நெருங்கிக் கொண்டிருந்தது.இராணுவ கண்காணிப்புகள் மிக அதிகமாக இருந்தது.டிரைவரிடம் விசாரித்தபோது இப்போது எவ்வளவோ குறைந்துள்ளது என்றார்.தோழிகள் கழிவறைக்கு செல்லவேண்டி இங்கேயே வேனை நிறுத்தலாம் என்றோம்.யாராவது பேச்சு கொடுத்தாலும் யோசித்து பேசுங்க என்றாள் ரஞ்சி.இறங்கிய ஒரு நிமிடத்திலே வேனை நோக்கி ஒரு போலிஸ்காரர் வேகமாக வந்தார்.

ஏன் வேனை நிறுத்தினிங்க?எங்க போறிங்க? வேன் எங்க கிளம்பியது எங்கே போகிறது?இவர்களுள் யார் வீடு இங்கே இருக்கிறது? என சரமாறியான கேள்விகள்.டிரைவருக்கு சிங்களம் தெரியும் என்பதால் அவர் பதில் கூறத்தொடங்கினார்.அதற்குள் நாங்கள் வேறெதுவும் பேசாமல் கழிவறை எங்கிருக்கிறது அவசரம் என்றோம்.நம் மதுரை தோழி ரஜனி செல்பேசி எடுத்து காமிராவை ஆன் செய்யப் போனார்.அதற்குள் அவரை அமுக்கி பிடித்து கூட்டிச் சென்றோம்.ஒருவருக்கு பத்துரூபாய் கட்டணம் வசூலித்தார்கள்.நாங்கள் மீண்டும் வேன் ஏறும் வரை போலிஸ்காரரின் பார்வை எங்களை விட்டு அகலாமல் இருந்தது.கிளிநொச்சி முருகர் கோவிலை அடைந்தோம்.அப்போது இரவு எட்டுமணி  பக்தர்கள் ஆர்வமாக கும்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.சூடாக வேர்க்கடலை வாங்கி சாப்பிடலாமென வாங்கிக் கொண்டு வேன் ஏறும்போதே கண்கலங்கியது.எத்தனை உயிர்கள் இம்மண்ணில் சின்னாபின்னமாகியிருக்கிறது.இங்கு சாப்பிடும் இக்கடலை எந்த மண்னில் விளைந்திருக்கும் கிளிநொச்சியிலா யாழ்ப்பாணத்திலா? வவுனியா ,கிளிநொச்சி பகுதியில் போரில் பாதித்தவர்கள் ஆங்காங்கே குடியேறிய வீடுகளை ரஞ்சி காண்பித்தார். சிங்களவர்களும் இராணுவமும் அதிகமா இருக்காங்க என்றார் டிரைவர்.

இதற்கிடையே தம்பி தேவேந்திரம் சிவா அவருடைய அம்மாவையும் வருங்கால துணைவியையும் பார்க்க முடியுமா எனக் கேட்டு முகநூலில் தகவல் அனுப்பி இருந்தார்.இவர் தற்போது பிரான்சில் பணிபுரிந்து வருகிறார்.சாவகச்சேரி முகவரியைத் தந்திருந்தார்.நான் சாவகச்சேரியைக் கடக்கும்போது நள்ளிரவை நெருங்கியிருந்த்து அதனால் அவரது வீட்டாரை தொந்தரவு செய்யவேண்டாமென நேராக யாழினி வீட்டிற்குபோய் சேர்ந்தோம்.ஊர் மிக ஆழ்ந்த அமைதியில் உறங்கிக் கொண்டிருந்தது. அமைதியை முப்பது ஆண்டுகளுக்கு முன் தொலைத்த ஊர் இது.மக்கள் இந்த இரவு உறக்கத்தின் காரணமாக தற்காலிக அமைதியைத் தந்து கொண்டிருக்கிறது.

அடுத்த நாள் காலை யாழினி வீட்டுக் கிணற்றில் ஒருவருக்கொருவர் நீர் இறைத்து ஊற்றிக் குளித்தோம்.பால் ஆப்பம் ,மரவள்ளி புட்டு தேங்காய் துவையல் ,தர்பூசணி , பப்பாளி என காலை உணவு அமர்க்களமாக இருந்தது.நல்ல குளியலும் உணவும் உறக்கமும் புத்துணர்வு தந்தது.ஒரு ஆட்டோ பிடித்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று பார்த்தோம்.முருகன் கோவில் ,சிவன்கோவில் பகுதிகளைப் பார்த்துவிட்டு கடலோரத்திலிருந்த ஆலயம் இங்கு இராமேசுவரம் போல கடல் நீரில்  ஆடி அம்மாவாசை அன்று தர்ப்பணம் செய்து கடலில் மூழ்குவார்களாம்.

பதிமூன்று ஆண்டுகளாக இந்தப் பகுதிகள் எல்லாம் இராணுவத்திடம் இருந்தது.இப்போது மக்கள் சகஜமாக வரமுடிகிறது என்றார்கள்.அங்கு செல்லும் போதும் திரும்பும் போதும்  பார்த்த இடங்கள் மனசை கனமாக்கின.இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் காஷ்மீர் விமான நிலையம் இறங்கி வெளிவந்தபோது  இராணுவம் ஆங்காங்கே நின்று நடக்கும் போதே ஒரு அந்நியத் தன்மையை உணர்ந்ததுபோல இங்கும் தம்புலா தாண்டி இப்போது வரை பயணிக்கும் இடங்கள் முழுக்க இராணுவ நடமாட்டம் இயல்புத்தன்மை இல்லாமல் செய்தது.

யாழ்ப்பாண நூலகம் சென்று பார்த்தோம். வரலாற்றின் அழிக்கமுடியா சம்பவங்கள் நடந்த இடம்.புதுநூலகம் அங்கு கட்டப்பட்டிருந்தது.போர்க்காலங்களில் குண்டடி பட்டு தாக்குதலுக்கு உள்ளான வீடுகளைப் பார்த்த படி சென்றோம் .இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் ஆளில்லா வீடுகள் இவர்களின் அவலத்திற்கு சாட்சியாக இருந்தன.இறங்கி வீடுகளைப் பார்த்தேன் .இடையிடையே சில வீடுகளுக்கு கூரையிட்டு மக்கள் வாழ்ந்துகொண்டிருந்தனர்.மண் சாம்பல் பூத்த மண்ணாக இருந்தது. இடிந்து வீழ்ந்த சுவரில் வெள்ளைத்தாள் ஒட்டப்பட்டிருந்தது.   அருகில் சென்று பார்த்தேன். கள்ளுக் கடை அப்பகுதியில் வைக்கப்படுவது குறித்தான அறிவிப்பு இருந்தது.அடப்பாவமே மக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக அள்ளி இறைத்தாற்போல வாழுகிற பகுதியில் கள்ளுக்கடை திறக்கப் படுவதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.

அங்கிருந்து கிளம்பி அடுத்தநாள் கிளிநொச்சி ,முள்ளிவாய்க்கால் பகுதிகளுக்கு சென்றோம்.போர்நடந்த இடம்போல இல்லை.இராணுவம் அப்பகுதிகளை அடையாளம் தெரியாத அளவு செப்பனிட்டிருந்தது.முள்ளிவாய்க்கால் போகும் வழியில் சல்லடையாக குண்டு துளைக்கப்பட்ட சில சுவர்களைப் பார்க்க முடிந்தது.அங்கே நிறுத்தி புகைப்படம் எடுக்கலாமென்றால் டிரைவர் வேண்டாம் அம்மா வம்பு எதற்கு கேமராவை உள்ளே வையுங்கள் என்றார்.

இராணுவம் வெற்றிச்சின்னம் நாட்டிய நினைவுப் பலகைகளைப் பார்த்தோம்.இந்த மண்ணில் இந்த வாய்க்காலில் எத்தனை எத்தனை பேர் மாண்டுகிடந்தார்கள் அவர்களை மானசீகமாய் நினைத்துக் கொண்டே பயணித்தேன்.கிளிநொச்சியில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும் புலிகள் அமைப்பு பயன்படுத்திய நீர்ப்படையின் தளவாடங்கள் நீர்மூழ்கி தன்மையிலான கடல் சாதனங்கள் படகுகள் அங்கே வைக்கப் பட்டிருந்தன. அருகே ஒரு குளிர்பானக்கடையை இராணுவமே வைத்திருந்தது.அங்கிருந்து கொழும்பு நோக்கி பயனித்தோம் .

ஏறத்தாழ என்னுடைய இலங்கைப் பயணம் என்பது ஆயிரம் கிலோமீட்டர் பகுதிகளைப் பார்ப்பதாக இருந்தது.அனுராதபுரம் பகுதியை அடைந்தபோது முகநூல் தம்பி தயாளன் அனுராதபுர புத்தர் கோவில் குறித்து சொல்லிக்கொண்டிருந்தான்.அக்கோவில் விளக்கொளியில் தெரிந்தது.இறங்கிப் பார்க்க அவகாசமில்லை.அனுராதபுரம் அடர் காடுகளைக் கொண்ட பகுதி என்பதால் ஆங்காங்கே யானைகள் நின்றுகொண்டிருந்தன.டிரைவர் ஆங்காங்கே நிறுத்திக்காட்டினார்.

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை என் பள்ளி நாட்களில் படித்தபோது இலங்கை குறித்த கற்பனை அலாதியானது.நடைமுறை வரலாறில் அந்த நாடு சதா செய்திகளில் கலங்கடித்துக் கொண்டே இருந்தது. இந்த காட்டு யானைகள்தான் கல்கி எழுதிய காலத்தோடு கொஞ்சம் நம்மை பிணைத்தது.ஆனையிறவும் முல்லைத்தீவும் பூங்குழலியும் என்னை மனம் கனக்க வைத்தார்கள்.இரவு கொழும்பை அடைந்தோம்

வழியெங்கும் பயணத்தின் போது பயப்பட தேவை இல்லாத இடங்களில் கூட இருந்த பயம் குறைந்தது.நான் தங்கிய தோழி வீட்டில் உதவிக்காக சிங்களப்பெண் லீலா இருந்தாள்.மிக அன்பானவர்.எங்களுக்கு சம்பல் இடித்து தருவதும் தேநீர் தயாரிப்பதும் போகும் இடங்களுக்கு வழி சொல்லித் தருவதுமாயிருந்தார்.அங்கு பாண்டிபஜார் போல பெரிய மார்க்கெட் இருந்தது .அங்கு தோழிகள் பல்வேறு பொருட்களை உடைகளை வாங்கினார்கள்.நான் ஒரு தோல் பை மட்டும் வாங்கினேன்.

இரவு தோழி ஷாமிலா முஸ்டீன் வீட்டில் சாப்பாடு .கோதுமை இடியப்பமும் சொதியும் மீன் குழம்பும் கொடுத்தார்கள்.மீன் குழம்பு முஸ்டீன் செய்தது.பொறித்த மீனில் செய்ததால் தான் இத்தனை ருசி என்றார்.அவர்கள் வீட்டு மொட்டை மாடியில் இருந்து கடற்பகுதி அரைகிலோமீட்டர்தான்.ஆர்பர் தெரிந்தது.அடுத்த நாள் காலை சிங்களத் தோழி லீலா சிங்கள சேலை அணிய சொல்லிக் கொடுத்தார்.விமானநிலையம் கிளம்பியபோது பிரிய இயலாமல் தோழிகள் கண்கலங்கினார்கள்.விமான நிலையத்திற்குள் ரஞ்சியும் நானும் யோகியும் கட்டுப்படுத்தமுடியாமல் அவரவர் விமானங்களுக்காக பிரிந்தோம்.நீண்டகாலப் போர் நடந்த பூமியில் எங்கள் பிரிவின் பொருட்டான கண்ணீர் பொருட்டானது அல்ல என்றாலும் தமிழால் சந்தித்தோம்.பொன்னியின் செல்வன் படித்து முப்பது ஆண்டுகளாக மனதில் பதிந்த தொப்புள் கொடி மக்களை அவர்கள் வாழ்க்கையை நெருங்கிப் பார்த்திருக்கிறோம்.

ஏர் இந்தியாவிமானத்தில் அமர்ந்த பின் ஏதோ டெக்னிகல் கோளாறு என்று ஒரு மணிநேரம் அடைத்து வைத்திருந்தார்கள்.இறங்கவும் அனுமதி இல்லை.குளிர்சாதனப் பெட்டியும் வேலை செய்யவில்லை.பிராணவாயு போதாமல் குழந்தைகள் அழுதுகொண்டே இருந்தார்கள்.360 பயணிகள் இருந்தோம். ஆளாளுக்கு குரல் கொடுக்கத் தொடங்கினார்கள்.தண்ணீரும் டிஸ்யூ தாளும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.ஒருவழியாக சில நிமிடங்களில் விமானம் கிளம்பியது