ஒர் பெண்ணின் இலங்கைப் பயணம் 2


தங்கிய விடுதியை ஒட்டிய ஓடையின் சலசலப்பு அங்கு நிலவிய அமைதியில் அதிகமாக கேட்டது.குளிர் இருந்தது.அடுத்தநாள் குளித்துக் கிளம்பி ஓடையைப் பார்க்க பட்டிகொலா பகுதியிலிருந்து வந்த ப்ரௌப்பி,யாழினி,யோகிசந்ருவுடன் நானும் கிளம்பினேன்.பல புதிய மலர்களைப் பார்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.அங்கிருந்த இயற்கையை கண்ணுக்குள் பிடித்து வைக்கமுடியவில்லை.மனம் முழுவதையும் அழகு ஆக்கிரமித்தது..கருத்தரங்கம் நடக்கும் இடம் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது நடந்தே செல்லலாமென நாங்கள் வழியெங்கு இயற்கை காட்சிகளை இரசித்து புகைப்படம் எடுத்துக் கொண்டு அவரவர் ஊர் கதைகளைப் பகிர்ந்து கொண்டே நடந்தோம்.

இரண்டுநாள் கருத்தரங்கமும் பெண்களின் சமகால வாழ்க்கை,வேலை வாய்ப்புகள்,அங்கே எதிர்கொள்ளும் சிக்கல்கள்,கல்வி,உயர்கல்வி,மலையக பெண்கள்,முஸ்லிம் பெண்களின் பிரச்சனைகள் என விரிவாக விவாதிக்கப்பட்டது.கலந்துரையாடலின் போது மலையகத்தில் இருக்கும் தோட்டத் தொழிலாளிப் பெண்களைக் குறித்து பேசும் போது அவர்களுக்கு கழிவறை இல்லாமல் சிறுநீர்கழிக்க இயலாமல் மாதவிடாய் காலங்களில் படும் அவஸ்தை குறித்து எல்லா பெண்களும் பேசினார்கள்.ஆங்காங்கே கழிவறைகளை அமைக்கவேண்டுமென தொடர்ந்த விவாதத்தில் நுவரேலியா பகுதியின் எம்.பி யும் தோட்டத்தொழிலாளியின் மகளுமான சரஸ்வதி சிவகுரு பெண்களின் இப் பிரச்சனையை அரசுக்கு கவனப் படுத்துவதாகவும் இவரது மாகாணத்தில் இவரது நேரடிப் பார்வையில் கழிவறைகளை அமைப்பதாகவும் உறுதியளித்தார்

.இரண்டுநாள் அமர்விலும் சரஸ்வதி அவர்கள் பார்வையாளராக மட்டுமே அமர்ந்திருந்தார்.நிகழ்ச்சி நடப்பதை அறிந்து அவராகவே வந்து ஆர்வத்தோடு தன் பங்களிப்பை செய்தார்.தோழி நளினி பெண்களுக்காக தொடர்ந்து செயல் படுபவர் ஜெனிவா வரை சென்று பேசுகிறவர்.அவரும் பார்வையாளராக இருந்து கலந்துரையாடலில் பங்கேற்றார்.மேலைநாடுகளில் பேசக்கூடியதான பெண்களுக்கான உரிமைகள் பற்றிப் பேசுகிற பெண்கள் சந்திப்பாக இல்லாமல் மண்சார்ந்த உழைக்கும் பெண்கள்,அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மையமாக இருந்த்து.முஸ்லிம் பெண்களின் கருத்துரைகளும் ஆழமாக விவாதிக்கப் பட்டது.கலந்துரையாடலில் குரான் கூறும் கருத்து பெண்களுக்கு முக்கியத்துவம் தருவதாகவும் நடைமுறையில் அவை மாற்றப் பட்டிருப்பதையும் பேசினார்கள்.இப்படி விவாதித்த முஸ்லிம் தோழிகள் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் பணியாற்றி வருகிறவர்கள்.

இந்த இரண்டு நாட்களிலும் புதுப் புது விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது.சம்பல் என்று துருவிய தேங்காயோடு மிளகாய் எலுமிச்சை சாறு உப்பு வைத்து இடித்ததை ப்ரட் க்கு வைத்து சாப்பிடுகிறார்கள்.அது மட்டுமல்லாமல் சில குழம்புவகைகளை வைத்தும் காலை இரவு நேரங்களில் பிரட் மட்டுமே சாப்பிடுகிறார்கள்.இது பாரம்பரிய உணவு முறையாக இல்லாவிட்டாலும் வழக்கத்தில் இதுதான் இருக்கிறது.தோட்டங்களில் வேலைபார்க்கும் பெண்கள் அதிகாலையில் சென்றுவிடுவதும்.இரவு நேரங்களில் சமைக்க முடியாமல் போவதாலும் பிரட் ,பன் சாப்பிடும் வழக்கம் உண்டாகியிருக்கிறது.மாசி கருவாடு வைத்தும் சம்பல் செய்கிறார்கள்.

பெண்கள் சந்திப்பு முடிந்த அடுத்த நாள் காலை தோழி சிறி வீட்டில் அடையும் உப்புமாவும் சாப்பிட்டுவிட்டு நெகிழ்வோடு கிளம்பினோம்.மலை இறங்கத் துவங்கினோம்.மூன்றுமணி நேர பயணத்தில் தோழி லறீனாவின் வீட்டில் மதிய உணவு காத்திருந்தது.தொடர்ந்து முஸ்லிம் பெண்களுக்காக எழுதுகிற தோழி லறீனா வீட்டில் நெய்சோறு ,கோழி இறைச்சி,அன்னாச்சிப்பழ கறி.உருளைக்கிழங்கு மசால்,கேரட் பச்சடி,வட்டப்பம் என அன்போடு போதும் போதும் எனும் அளவு பறிமாறினார்கள்.அன்னாச்சிக் கறியும் வட்டப்பமும் நான் முதல் முதலில் ருசிக்கிறேன்.இரண்டுமே அத்தனை சுவையாக இருக்கிறது.உங்களுக்காக அடுத்த இதழில் சமைக்கும் முறையையும் சொல்கிறேன்.அங்கிருந்து  யாழ்ப்பாணம் நோக்கி பயணித்தோம் .

தம்புலா புத்தர் கோவிலைப் பார்த்தோம்.மிக உயரமான புத்தர் சிலை அவருக்கு பின்பான மூலஸ்தானத்தில் புத்தரின் கிடந்த கோலத்தைப் பார்த்தோம்.வேன் வவுனியாவை நெருங்கிக் கொண்டிருந்தது.இராணுவ கண்காணிப்புகள் மிக அதிகமாக இருந்தது.டிரைவரிடம் விசாரித்தபோது இப்போது எவ்வளவோ குறைந்துள்ளது என்றார்.தோழிகள் கழிவறைக்கு செல்லவேண்டி இங்கேயே வேனை நிறுத்தலாம் என்றோம்.யாராவது பேச்சு கொடுத்தாலும் யோசித்து பேசுங்க என்றாள் ரஞ்சி.இறங்கிய ஒரு நிமிடத்திலே வேனை நோக்கி ஒரு போலிஸ்காரர் வேகமாக வந்தார்.

ஏன் வேனை நிறுத்தினிங்க?எங்க போறிங்க? வேன் எங்க கிளம்பியது எங்கே போகிறது?இவர்களுள் யார் வீடு இங்கே இருக்கிறது? என சரமாறியான கேள்விகள்.டிரைவருக்கு சிங்களம் தெரியும் என்பதால் அவர் பதில் கூறத்தொடங்கினார்.அதற்குள் நாங்கள் வேறெதுவும் பேசாமல் கழிவறை எங்கிருக்கிறது அவசரம் என்றோம்.நம் மதுரை தோழி ரஜனி செல்பேசி எடுத்து காமிராவை ஆன் செய்யப் போனார்.அதற்குள் அவரை அமுக்கி பிடித்து கூட்டிச் சென்றோம்.ஒருவருக்கு பத்துரூபாய் கட்டணம் வசூலித்தார்கள்.நாங்கள் மீண்டும் வேன் ஏறும் வரை போலிஸ்காரரின் பார்வை எங்களை விட்டு அகலாமல் இருந்தது.கிளிநொச்சி முருகர் கோவிலை அடைந்தோம்.அப்போது இரவு எட்டுமணி  பக்தர்கள் ஆர்வமாக கும்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.சூடாக வேர்க்கடலை வாங்கி சாப்பிடலாமென வாங்கிக் கொண்டு வேன் ஏறும்போதே கண்கலங்கியது.எத்தனை உயிர்கள் இம்மண்ணில் சின்னாபின்னமாகியிருக்கிறது.இங்கு சாப்பிடும் இக்கடலை எந்த மண்னில் விளைந்திருக்கும் கிளிநொச்சியிலா யாழ்ப்பாணத்திலா? வவுனியா ,கிளிநொச்சி பகுதியில் போரில் பாதித்தவர்கள் ஆங்காங்கே குடியேறிய வீடுகளை ரஞ்சி காண்பித்தார். சிங்களவர்களும் இராணுவமும் அதிகமா இருக்காங்க என்றார் டிரைவர்.

இதற்கிடையே தம்பி தேவேந்திரம் சிவா அவருடைய அம்மாவையும் வருங்கால துணைவியையும் பார்க்க முடியுமா எனக் கேட்டு முகநூலில் தகவல் அனுப்பி இருந்தார்.இவர் தற்போது பிரான்சில் பணிபுரிந்து வருகிறார்.சாவகச்சேரி முகவரியைத் தந்திருந்தார்.நான் சாவகச்சேரியைக் கடக்கும்போது நள்ளிரவை நெருங்கியிருந்த்து அதனால் அவரது வீட்டாரை தொந்தரவு செய்யவேண்டாமென நேராக யாழினி வீட்டிற்குபோய் சேர்ந்தோம்.ஊர் மிக ஆழ்ந்த அமைதியில் உறங்கிக் கொண்டிருந்தது. அமைதியை முப்பது ஆண்டுகளுக்கு முன் தொலைத்த ஊர் இது.மக்கள் இந்த இரவு உறக்கத்தின் காரணமாக தற்காலிக அமைதியைத் தந்து கொண்டிருக்கிறது.

அடுத்த நாள் காலை யாழினி வீட்டுக் கிணற்றில் ஒருவருக்கொருவர் நீர் இறைத்து ஊற்றிக் குளித்தோம்.பால் ஆப்பம் ,மரவள்ளி புட்டு தேங்காய் துவையல் ,தர்பூசணி , பப்பாளி என காலை உணவு அமர்க்களமாக இருந்தது.நல்ல குளியலும் உணவும் உறக்கமும் புத்துணர்வு தந்தது.ஒரு ஆட்டோ பிடித்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று பார்த்தோம்.முருகன் கோவில் ,சிவன்கோவில் பகுதிகளைப் பார்த்துவிட்டு கடலோரத்திலிருந்த ஆலயம் இங்கு இராமேசுவரம் போல கடல் நீரில்  ஆடி அம்மாவாசை அன்று தர்ப்பணம் செய்து கடலில் மூழ்குவார்களாம்.

பதிமூன்று ஆண்டுகளாக இந்தப் பகுதிகள் எல்லாம் இராணுவத்திடம் இருந்தது.இப்போது மக்கள் சகஜமாக வரமுடிகிறது என்றார்கள்.அங்கு செல்லும் போதும் திரும்பும் போதும்  பார்த்த இடங்கள் மனசை கனமாக்கின.இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் காஷ்மீர் விமான நிலையம் இறங்கி வெளிவந்தபோது  இராணுவம் ஆங்காங்கே நின்று நடக்கும் போதே ஒரு அந்நியத் தன்மையை உணர்ந்ததுபோல இங்கும் தம்புலா தாண்டி இப்போது வரை பயணிக்கும் இடங்கள் முழுக்க இராணுவ நடமாட்டம் இயல்புத்தன்மை இல்லாமல் செய்தது.

யாழ்ப்பாண நூலகம் சென்று பார்த்தோம். வரலாற்றின் அழிக்கமுடியா சம்பவங்கள் நடந்த இடம்.புதுநூலகம் அங்கு கட்டப்பட்டிருந்தது.போர்க்காலங்களில் குண்டடி பட்டு தாக்குதலுக்கு உள்ளான வீடுகளைப் பார்த்த படி சென்றோம் .இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் ஆளில்லா வீடுகள் இவர்களின் அவலத்திற்கு சாட்சியாக இருந்தன.இறங்கி வீடுகளைப் பார்த்தேன் .இடையிடையே சில வீடுகளுக்கு கூரையிட்டு மக்கள் வாழ்ந்துகொண்டிருந்தனர்.மண் சாம்பல் பூத்த மண்ணாக இருந்தது. இடிந்து வீழ்ந்த சுவரில் வெள்ளைத்தாள் ஒட்டப்பட்டிருந்தது.   அருகில் சென்று பார்த்தேன். கள்ளுக் கடை அப்பகுதியில் வைக்கப்படுவது குறித்தான அறிவிப்பு இருந்தது.அடப்பாவமே மக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக அள்ளி இறைத்தாற்போல வாழுகிற பகுதியில் கள்ளுக்கடை திறக்கப் படுவதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.

அங்கிருந்து கிளம்பி அடுத்தநாள் கிளிநொச்சி ,முள்ளிவாய்க்கால் பகுதிகளுக்கு சென்றோம்.போர்நடந்த இடம்போல இல்லை.இராணுவம் அப்பகுதிகளை அடையாளம் தெரியாத அளவு செப்பனிட்டிருந்தது.முள்ளிவாய்க்கால் போகும் வழியில் சல்லடையாக குண்டு துளைக்கப்பட்ட சில சுவர்களைப் பார்க்க முடிந்தது.அங்கே நிறுத்தி புகைப்படம் எடுக்கலாமென்றால் டிரைவர் வேண்டாம் அம்மா வம்பு எதற்கு கேமராவை உள்ளே வையுங்கள் என்றார்.

இராணுவம் வெற்றிச்சின்னம் நாட்டிய நினைவுப் பலகைகளைப் பார்த்தோம்.இந்த மண்ணில் இந்த வாய்க்காலில் எத்தனை எத்தனை பேர் மாண்டுகிடந்தார்கள் அவர்களை மானசீகமாய் நினைத்துக் கொண்டே பயணித்தேன்.கிளிநொச்சியில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும் புலிகள் அமைப்பு பயன்படுத்திய நீர்ப்படையின் தளவாடங்கள் நீர்மூழ்கி தன்மையிலான கடல் சாதனங்கள் படகுகள் அங்கே வைக்கப் பட்டிருந்தன. அருகே ஒரு குளிர்பானக்கடையை இராணுவமே வைத்திருந்தது.அங்கிருந்து கொழும்பு நோக்கி பயனித்தோம் .

ஏறத்தாழ என்னுடைய இலங்கைப் பயணம் என்பது ஆயிரம் கிலோமீட்டர் பகுதிகளைப் பார்ப்பதாக இருந்தது.அனுராதபுரம் பகுதியை அடைந்தபோது முகநூல் தம்பி தயாளன் அனுராதபுர புத்தர் கோவில் குறித்து சொல்லிக்கொண்டிருந்தான்.அக்கோவில் விளக்கொளியில் தெரிந்தது.இறங்கிப் பார்க்க அவகாசமில்லை.அனுராதபுரம் அடர் காடுகளைக் கொண்ட பகுதி என்பதால் ஆங்காங்கே யானைகள் நின்றுகொண்டிருந்தன.டிரைவர் ஆங்காங்கே நிறுத்திக்காட்டினார்.

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை என் பள்ளி நாட்களில் படித்தபோது இலங்கை குறித்த கற்பனை அலாதியானது.நடைமுறை வரலாறில் அந்த நாடு சதா செய்திகளில் கலங்கடித்துக் கொண்டே இருந்தது. இந்த காட்டு யானைகள்தான் கல்கி எழுதிய காலத்தோடு கொஞ்சம் நம்மை பிணைத்தது.ஆனையிறவும் முல்லைத்தீவும் பூங்குழலியும் என்னை மனம் கனக்க வைத்தார்கள்.இரவு கொழும்பை அடைந்தோம்

வழியெங்கும் பயணத்தின் போது பயப்பட தேவை இல்லாத இடங்களில் கூட இருந்த பயம் குறைந்தது.நான் தங்கிய தோழி வீட்டில் உதவிக்காக சிங்களப்பெண் லீலா இருந்தாள்.மிக அன்பானவர்.எங்களுக்கு சம்பல் இடித்து தருவதும் தேநீர் தயாரிப்பதும் போகும் இடங்களுக்கு வழி சொல்லித் தருவதுமாயிருந்தார்.அங்கு பாண்டிபஜார் போல பெரிய மார்க்கெட் இருந்தது .அங்கு தோழிகள் பல்வேறு பொருட்களை உடைகளை வாங்கினார்கள்.நான் ஒரு தோல் பை மட்டும் வாங்கினேன்.

இரவு தோழி ஷாமிலா முஸ்டீன் வீட்டில் சாப்பாடு .கோதுமை இடியப்பமும் சொதியும் மீன் குழம்பும் கொடுத்தார்கள்.மீன் குழம்பு முஸ்டீன் செய்தது.பொறித்த மீனில் செய்ததால் தான் இத்தனை ருசி என்றார்.அவர்கள் வீட்டு மொட்டை மாடியில் இருந்து கடற்பகுதி அரைகிலோமீட்டர்தான்.ஆர்பர் தெரிந்தது.அடுத்த நாள் காலை சிங்களத் தோழி லீலா சிங்கள சேலை அணிய சொல்லிக் கொடுத்தார்.விமானநிலையம் கிளம்பியபோது பிரிய இயலாமல் தோழிகள் கண்கலங்கினார்கள்.விமான நிலையத்திற்குள் ரஞ்சியும் நானும் யோகியும் கட்டுப்படுத்தமுடியாமல் அவரவர் விமானங்களுக்காக பிரிந்தோம்.நீண்டகாலப் போர் நடந்த பூமியில் எங்கள் பிரிவின் பொருட்டான கண்ணீர் பொருட்டானது அல்ல என்றாலும் தமிழால் சந்தித்தோம்.பொன்னியின் செல்வன் படித்து முப்பது ஆண்டுகளாக மனதில் பதிந்த தொப்புள் கொடி மக்களை அவர்கள் வாழ்க்கையை நெருங்கிப் பார்த்திருக்கிறோம்.

ஏர் இந்தியாவிமானத்தில் அமர்ந்த பின் ஏதோ டெக்னிகல் கோளாறு என்று ஒரு மணிநேரம் அடைத்து வைத்திருந்தார்கள்.இறங்கவும் அனுமதி இல்லை.குளிர்சாதனப் பெட்டியும் வேலை செய்யவில்லை.பிராணவாயு போதாமல் குழந்தைகள் அழுதுகொண்டே இருந்தார்கள்.360 பயணிகள் இருந்தோம். ஆளாளுக்கு குரல் கொடுக்கத் தொடங்கினார்கள்.தண்ணீரும் டிஸ்யூ தாளும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.ஒருவழியாக சில நிமிடங்களில் விமானம் கிளம்பியது

ஒர் பெண்ணின் இலங்கைப் பயணம் 1


சுவிஸ் தோழி ரஞ்சி இலங்கையில் பெண்கள் சந்திப்பு நடக்க இருக்கிறது நீயும் அவசியம் வா என்று அழைத்திருந்தார்.தோழியைக் காணும் ஆர்வத்தோடு விமானத்தில் அமர்ந்தேன்.என்னுடைய முதல் வெளிநாட்டுப் பயணம் இது.

முதல் பயணமே நம் தமிழர்கள் தோட்டவேலைக்கு சென்ற மலையகப் பகுதியில் பேசுவதற்காக செல்கிறேன் என்பதில் மகிழ்ச்சி.அவர்கள் நம் தொப்புள் கொடி உறவுகள்.வயிற்றுப் பிழைப்புக்காக தமிழகத்திலிருந்து அழைத்துச்செல்லப் பட்டவர்கள்  .

ஏர் இந்தியா விமானத்தில் ஜன்னலோர இருக்கையில் வெளியே பார்த்தேன்.சென்னை கட்டிடங்கள் வத்திப்பெட்டியைப் போல இருக்க கீற்றாக கடற்கரையும் தெரிந்தது.என் கையில் வைத்திருந்த சில இலக்கிய இதழ்களை வாசித்து முடிப்பதற்குள் விமானம் தரை இறங்கப் போவதாக அறிவிப்பு வந்தது.ஒன்றரை மணி நேர பயணம்.தரை இறங்க விமானம் தாழ்ந்து பறந்த போது இலங்கையின் மீது வட்டமிடும் சிட்டுக்குருவியாக என்னை நினைத்துக் கொண்டேன்.இப்படி கற்பனை ஓடும் போதே இந்த அழகான பசுந்தீவில் மக்கள் எப்படி இருப்பார்கள்? அவர்களின் வாழ்க்கை இப்போது எப்படி இருக்கிறது என்கிற கேள்வியும் எழுந்தது.இதே வானில் விமானங்கள் கொத்துவெடியைத் தாங்கி வெடித்திருக்கின்றன.இந்த மண்ணிலும் காற்றிலும் கந்தகத்தின் வாசனை கலந்திருக்குமா?என்ற எண்ணங்களோடு தரை தாழப் பறந்தது விமானம்.

பச்சைப் பசேலென தீவு முழுவதும் பசுமையாக ஆங்காங்கே நீர்த்திட்டுகளாகத் தெரிந்தது.கொழும்பு பண்டாரநாயக்க நிலையத்தை விமானம் அடைந்தது. அங்கிருந்து வெளியேற இமிகிரேஷன் பகுதிக்கு சென்றேன்.அடர் நீல வண்ணத்தில் சிங்களப் பெண்கள் இருவர் அவர்கள் பாணியில் சேலை உடுத்தி இருந்தார்கள்;பார்ப்பதற்கு மிக நேர்த்தியாக இருந்தது.அங்கிருந்து வெளியேறினேன்.அங்கே தோழிகளின் கூட்டம்; பார்த்த உடன் மனசெங்கும் ஊற்று.ரஞ்சியுடன் மலேசியத்தோழி யோகிசந்ரு,யாழ்ப்பாணத்தோழி யாழினி,மும்பையில் இருந்து புதியமாதவி வந்திருந்தார்கள்.எங்கள் அனைவருக்கும் இதுதான் முதல் சந்திப்பு

முகநூலில் நண்பர்களாக இருந்தாலும் இன்பாக்ஸில் பேசிக் கொண்டது கூட இல்லை.பார்த்த உடனே பலநாள் பழகிய உணர்வு ஏற்பட்டது.சின்னதாக அணைத்துக் கொண்டோம்.கைகுலுக்கினோம்.ஒவ்வொருவர் முகத்திலும் அத்தனை பரவசம்.ரஞ்சி எனக்கு கிரீம்சோடா கொடுத்தார்.நம் ஊரில் இப்படி சோடா குடித்ததில்லை .இங்கு பன்னீர் சோடா போல அங்கு கிரீம் சோடா ஒரு தனி ருசியில் இருந்த்து.அங்கேயே ஒரு செல்ஃபி எடுத்து முகநூலில் பதிவிட்டேன்.ஏனெனில் ஒன்றரை மணி நேர பயணத்திற்குள் இன்பாக்ஸில்  நிறைய பேர் பயணம் குறித்து விசாரித்தார்கள்.எங்கள் வரவை எதிர்பார்த்திருக்கும் இலங்கை தோழிகளும் நான் வந்து சேர்ந்தேனா  என கேட்டபடியிருந்தனர்.அனைவருக்குமான  ஒரே பதிலாக எங்கள் முகநூல் புகைப்பட்த்தை சுவரில் பதிந்தேன்.

ரஞ்சி,யாழினி இருவரும் யாழ்ப்பாணம் என்றாலும் ரஞ்சி சுவிஸ்ஸில் ஏறக்குறைய இருபது ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார். அதனால் இருவரது தமிழ் உச்சரிப்பிலும் வித்தியாசமிருந்தது.யாழினியின் யாழ்ப்பாணத்தமிழும் குரலும் கொஞ்சிப் பேசியது.அவளை பேசவிட்டு கேட்டுக் கொண்டிருப்பது சுவாரசியமாக இருந்தது. மலை ஏறத்தொடங்கியது எங்கள் வேன்.மதுரையிலிருந்து வந்திருந்த தோழி ரஜனி டீ வேண்டுமென கேட்டார்.மணி எட்டாகி இருந்தது.ஒரு சிங்கள உணவகத்தில் நிறுத்தினார் வேன் டிரைவர்.அங்கே அடுக்கப் பட்டிருந்த உணவு வகைகளைப் பார்த்தேன்.வைக்கப்பட்டிருந்த உணவுகள் புதுசாக இருந்தது.சொதி என உருளைக்கிழங்கிலும் மீனிலும் செய்திருந்தார்கள்.கொத்துபரோட்டா இடியாப்பம் இருந்தது.முன்பே இலங்கை சொதி பற்றி கேள்விபட்டிருக்கிறேன்.அதனால் மீன் சொதியை நானும் உருளை சொதியை புதியமாதவியும் வாங்கினோம்.இடியாப்பம் அவ்வளவு மென்மையாக இருந்தது.சொதி நாக்கில் பட்டதும் எச்சில் சுரந்தது.காரமில்லாமல் மிதமான ருசி

டீ என்றதும் சிலர் பாலில்லாத டீயும் சிலர் பால்டீயும் கேட்டார்கள்.இலங்கை முழுவதுமே பால் பயன்படுத்துவது குறைவு.பால்பவுடரை பால் மா என்கிறார்கள்.டீ,காபிக்கு பவுடர் கரைசலைத்தான் பயன் படுத்துகிறார்கள்.இவ்வளவு பசுமையான ஊரில் பால்மாடு கறந்து சுண்டக் காய்ச்சிய பாலில் டீ போடலாமே என்ற ஏக்கத்தோடு பிளாக் டீ குடித்து முடித்தேன்.மீண்டும் வேன் கிளம்பியது நல்ல மழை.இங்கு வெயிலும் மழையும் மாறிமாறி இருக்குமாம்.வேன் டிரைவர் கவனமாக வண்டி ஓட்டினார்.ரஞ்சியின் மாமா துணைக்கு டிரைவர் பக்கத்தில் இருந்தார்.எங்கள் அரட்டையும் பாடலும் ஓய்ந்து மழையோடு அமைதியாக பயணிக்கத் தொடங்கினோம்.மழை விடுவது வலுப்பதுமாக இருந்தது.வீடுகள் அதிகமில்லாத சாலை.சுற்றிலும் தேயிலைத் தோட்டங்கள்.

வழி தவறிவிடக் கூடாதென நினைத்தாலும் விசாரிக்க ஆட்களே இல்லாமல் வெறிச்சோடி இருந்தது.டிரைவரும் ரஞ்சியின் மாமாவும் குழப்பமில்லை சரியாக போய்சேர்த்துவிடுவோம் என்றாலும் ரஞ்சி விடுவதாயில்லை.மாமா மாமா என்று நச்சரிக்கத்தொடங்கினாள்.நிகழ்ச்சி ஏற்பாட்டாளருள் ஒருவரான சந்திரலேகா கிங்ஸ்லி எங்களுக்கா சாலை ஓரம் காத்திருந்தார்.இரவு பதினொரு மணி இறங்கியவர்களை ஓடிவந்து கட்டி அணைத்தார்.அங்குள்ள ஆசிரியப் பயிற்சிக்கல்லூரியின் முதல்வர் என்பதால் மிடுக்கோடு இருப்பார் என்கிற என் கற்பனை பொய்யாகிப் போனது.எளிமையாக பழகினார்.பாலில்லாத தேநீர் பறிமாறிக்கொண்டே அடுத்த நாளின் நிகழ்ச்சி நிரலை சொன்னார்.போலிஸ் அனுமதி பெற்றுவிட்டதாக சொன்னார்.போலிஸில் வருபவர்கள் சிங்களம் அறிந்தவர்களாக இருப்பார்கள்.தமிழ் தெரியாது என்றாலும் முக்கியமான சில சொற்களை அறிந்து வைத்திருப்பார்கள்.சிங்களவர்கள் தமிழர்கள் என்ற பாகுபாடு இங்கு கிடையாது.எல்லோரும் மிக இயல்பாக பழகுவார்கள் என்று நுவரேலியா மாகாணம் குறித்து சொன்னார்.நுவரேலியாவின் பாராளுமன்ற உறுப்பினர்(எம்.பி) சரஸ்வதி சிவகுரு நிகழ்ச்சி குறித்து கேள்விப்பட்டு ஆவலாக விசாரித்ததாக சொன்னார்.

உணர்வுகள் ஆசுவாசத்தை கையளிக்கும் காளி


தேடலும் புதுமை உணர்வும் கொண்டவர் மினுமீனா.என் சிறுகதைத் தொகுப்பான காளிக்கு 2022 பிப்ரவரியில் அவர் எழுதியுள்ள வாசிப்பு சார்ந்த குறிப்பு இது.அவருக்கு அன்பும் நன்றியும்.

மொத்தம் 12 சிறுகதைகள். கதையோடு ஒத்து வாசிக்கத்தகுந்த எழுத்து நடை . ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு விதமான அரசியலும், மக்களின் வாழ்வியலையும் தெளிவாக சொல்லிருக்காங்க. எந்த இடத்திலையும் கடினமாவோ தொய்வாகவோ தோன்றவில்லை. புரிந்து கொள்ள கதை சூழலோடு பொருத்திக் கொள்ள எளிமையான சொற்கள். பாதுகாப்பு, சமூக இடைவெளி என சொல்லி சொல்லி மனச்சோர்வு பெருகி போன நாட்களில் தேவையான ஆசுவாசம் கிடைக்க புத்தகங்கள் ரொம்ப உதவியா இருக்கும். அப்படியான உணர்வ தான் இதன் வழியாக மீட்டு கொள்கிறேன்.

****பாராசூட் இரவு பயணம்****

குப்பத்து மக்களுடைய வாழ்வியல் சூழல் அவர்களுடைய கனவு ஆசைகளை சொல்கிற கதை. யசோதா அச்சூழலின் பெண்ணிலை கல்வி பாதுகாப்பு என அப்பெண்களின் ஒட்டுமொத்த வடிவமாக தெரிகிறாள். அடிப்படை வசதி இருப்பிடம் தேடி அலைகின்ற மனதின் வலிகளை பதிய வைக்கிறார்.

***இரயில் விளையாட்டின் ராட்சஸ நொடிகள்***

இரயில் பயணத்தை நேசிக்கிற பொண்ணொருத்தி தன் சிநேகியின் வார்த்தைகளுக்கு செவிகொடுத்து ஒரு எச்சரிக்கை உணர்வோடு பயணிக்கிறாள். சகபயணியாக அறிமுகமான ஆண் ஒருவர் அந்த பெண்களிடம் Sexual abuse செய்கிறார். அதை எப்படி அந்த பெண்கள் கையாள்கிறார்கள் என்பதை விளக்குகிற கதை. தயக்கம் என்பது ரொம்ப ஆபத்தான வியாதி என தெளிவுபடுத்துகிறார். அந்த பெண் இரயிலை விட்டு இறங்குற நேரம் இரயில் அவளின் துணிச்சலில் அலறிக்கொண்டு ஓடியது என சொல்லப்பட்டிருக்கும். என்ன தான் தைரியமாக பிரச்சனைகளை சமாளித்தாலும் எப்போதும் எச்சரிக்கை உணர்வோடையே இருப்பது பெண்களுக்கே வழங்கப்பட்டிருக்கிற சாபமாக தோன்றியது.

***சிவப்பின் நிறம் பெண்மை***

இந்த கதை ரொம்பவே எனக்கு பிடித்திருந்தது. தனியா Trip போக நினைக்கிற பெண்ணுடைய ஆசை கனவு உற்சாகம் என Self explore பற்றிய மனவோட்டத்தை அழகா சொல்லிருப்பாங்க . பயண குறிப்புகளை தெளிவுடன் விளக்கியிருப்பாங்க. இயற்கையோடு இணைந்து பயணிக்கும் போது வழியோக்கில் நடக்கிற ஒரு மூடநம்பிக்கையான செயல் மாதவிடாய் தீட்டுபற்றிய பொதுபுத்தி கருத்தாங்களை உடைத்து பெண்ணின் வலிமையை பதிய வைக்கிற விதம் கூடுதல் சிறப்பு.

***ஈவா***

பல இடர்பாடுகளுக்கு நடுவே ஒரு பறவை போல பறந்து போகிற பெண்ணின் கதை. இதன் ஊடாகவே பாலின மாற்றத்தையும் பால் சார்ந்த புரிதலையும் போகிற போக்கில் அழகா சொல்லி புதிய கோணத்திற்கு சூழல் நகர்கிறது.

****காளி***

இந்த கதையில் பல விசயங்கள் பேசப்பட்டிருக்கும். உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் உழைப்பு சுரண்டல் காதல் திருமணம் குழந்தை வளர்ப்பு என எல்லாவற்றிற்குமான உணர்வை காளி கடத்தி செல்கிறாள்.

***அண்டர்டேக்கர்****

வளரிளம் ஆண் குழந்தையோட மனநிலையை இந்த கதை வழி பார்க்க முடிகிறது. பால் சார்ந்த ஹார்மோன் மாற்றத்தை அவனே உணருகிற விதம். அதனால் ஏற்படுகிற சில விளைவு . தன்னை எப்படி கையாள்வதென புரியாது தவிக்கிற மனசு அண்டர்டக்கராக மாறி நிற்கிறது.

***யவனா***

ஒரு இறப்பின் துயரத்தை விவரிக்கிற கதை. கதை போக்கில் விறுவிறுப்பும் ஆர்வத்தையும் கொடுக்கிறது. முடிவிற்குள்ளான காரணங்களை நம்மையே தேட வைக்கிறது.

****கிளிமஞ்சாரோ***

நாட்டு மக்களுக்கும் அரச குடும்பத்திற்குமான உறவு , உழைக்கும் மக்களின் உழைப்பு சுரண்டல் மற்றும் எகிப்தின் பண்பாடு பாரம்பரியம் , இறந்தவரை புதைத்து வைக்கும் பழக்கம் அது சார்ந்து கதை நிகழ்த்தப்படுகிறது.

****அவிப்பலி****

கல்லானாலும் கணவன் என சொல்கிற காலத்திலிருந்து மீண்டு கொடுமை பண்றவனை விட்டு ஒன்னு தள்ளி வந்து நிம்மதியா இரு. இல்ல திருப்பி திருப்பி வந்தா ஓடவிடுனு சொல்ற மாதிரி இருந்தது. ஆமா நம்மை சுழ்ந்திருக்கும் பல செல்லம்மாக்களின் கதை. செல்லம்மா எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வரும் தொடர்கதை .

***ஏகன்***

சென்னை வெள்ளசூழல் மாதிரியான கதைகரு. அதிலிருந்து மீண்டுவருகிற பெண்ணும் எலிகாப்டரிலிருந்து காப்பாத்துகிற ஒரு ராணுவ வீரனுக்கும் இடையான நட்பு நன்றியுணர்வு கலந்த அன்பின் நுணுக்கங்கள் ரொம்ப அழகா கடத்தப்பட்டிருக்கும். சமூக அக்கறை கொண்ட துணிச்சலான பெண் ரீனா தனித்துவம்.

***உயிர்ப்பு***

கருவுற்ற பெண்ணின் கர்ப்பகாலம் மாற்றத்தை வலிகளை சொற்களில் உணர முடிகிறது. மருத்துவமனையில் பார்க்கிற ஒரு முதிர்வயது பெண்ணின் சுருக்கங்களுக்குள் ஒளிந்திருக்கும் அனுபவங்கள் வாழ்விற்கான வலிமையை சொல்கிறது.

***ருத்ரா***

காட்டுவளங்கள் சுரண்டப்பட்டு நகரமயமாக்கலை விவரிக்கிற கதை. அதுவும் காட்டுவாழ் உயிரினத்திலிருந்து சொல்வது அழகு. காடு பற்றி தெரியாத காவலர் அதை பற்றி தெரிந்த ஒரு பழங்குடி இளைஞனை அழைத்து வருகிற காட்சி… விலங்கானாலும் மனிதனாலும் வளர்ந்தது ஓரே மண்ணு தான் என நிலவுடமை சார்ந்து எல்லாமே கார்ப்ரேட்களுக்கு தாரைவார்க்கிற சமூகபோக்கு சொல்லப்பட்டிருக்கும்.

#காளி புத்தகத்திலுள்ள எல்லா கதைகளிலும் பெரும்பாலும் பெண் பாத்திரங்கள் சார்ந்தே நகர்கிறது. நடைமுறை சார்ந்த அவலங்களே கதைகரு.இயல்பாக வாழ்வியல் சார்ந்த யதார்த்தத்தை கண்முன் காண்கிற உணர்வு. பெரிய பெரிய அரசியலும் நுணுக்கமான உணர்வுகளையும் பெரும் ஆசுவாசத்தையும் இக்கதைகளின் வழி உணர வைத்த தோழர் ச.விசயலட்சுமி அவர்களுக்கு பேரன்புகள்

எழுத்தாளுமைகள் பற்றிய இணையதளம்




www.tamilwriters.in தளத்தில் எழுத்தாளுமைகள் பகுதி “இணையவெளியில் முற்போக்கு, இடதுசாரி தமிழ் எழுத்தாளுமைகளைச் சேகரித்து, பாதுகாத்து, அடையாளப்படுத்துவோம்…” என்ற நோக்கத்தோடு ஆவணப்படுத்தும் பணியை செய்து வருகிறது அத்தளத்தில் என்னைப் பற்றிய அறிமுக இணைப்பை இங்கே அளிக்கிறேன். தோழர் உமர்ஃபாருக் அவர்களுக்கும் தோழர் பேரின்பராஜன் அவர்களுக்கும் நன்றி.

Continue reading “எழுத்தாளுமைகள் பற்றிய இணையதளம்”

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கில்…


2010 யூன் 23 ஆம் நாள் முதல் 27 வரை கோயம்புத்தூரில் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் ஆட்சிக்காலத்தில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற்றது.

அதன் 26 தேதிய ஆய்வரங்கில் பெண்ணியம் பொருண்மையில் ,”தமிழ்க் கவிதைகளில் பெண்ணியம்” தலைப்பில் ஆய்வுக் கட்டுரை வாசித்தேன். என்னோடு கே.ஏ.ஜோதிராணி,கஸ்தூரி ராஜா கட்டுரைகள் வாசித்தனர்.

மேலே காணப்படும் தினமணி நாளேட்டின் செய்தி நறுக்கில் காணப்படும் என் உரையின் சாரம், உங்கள் பார்வைக்குத் தரப்படுகின்றது:

பழம் தமிழ் கவிதைகளில் பெண்பாற் புலவர்களின் எழுச்சி பெற்ற உளவியலும் சுதந்திரமும் காணப்படுவதைப் போலவே நிலவுடமை பிடியில் சிக்கித் தவிக்கும் கருத்தியல்களால் பெண் அடிமைத்தனம் உச்சமாக இருந்ததை பார்க்கலாம்.

விடுதலையை சுவாசித்தலும் அடிமைக் கற்பை
சுமத்தலும் என இரு வேறு துருவங்களை தமிழ்க் கவிதை மரபில் காணமுடிகிறது.

சிற்றிலக்கியக் காலத்தில் மண் சார்ந்த பெண்களை பாடியுள்ளனர்.

மறுமலர்ச்சிக் காலகட்டத்தில் பெண் விடுதலை பேசிய பாரதி முதல் தங்கள் உரிமைகளை தாங்களே எடுத்துக் கொள்வதுதான் விடுதலைக்கான அடிநாதம் என வலியுறுத்துகிற தற்கால கவிஞர்கள் வரையிலுமான பரந்த பரப்பு இருக்கிறது.

இதில் , பெண்ணைத் தாயாக உயர்த்திப் போற்றுதுதல், பெண்களின் சிக்கல்களை பேசிவிட்டு தீர்வினைப் பேசாத கவிதைகள், பெண்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையான கருத்துக்களை முன்வைக்கும் கவிதைகள் என தற்காலக் கவிதைகளை பகுக்கலாம்.

சலிப்பூட்டும் குடும்ப வேலைகள் பெண்களுக்கு மட்டுமே என்பதால் மனச்சுமை அதிகரிக்கிறது.

மனங்களின் பறிமாற்றமின்றி பொருளாதார பரிமாற்றத்தின் மூலமாக நடைபெறும் திருமணங்கள் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்துகிறது.

பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள் என்பதே பொருளாதார தேவைக்காக ஒன்றுதானே தவிர பெரிய மாற்றம் சுதந்திரம் என்றும் கருதி விட முடியவில்லை.

தலித்தியம் பெண்ணியம் சூழலியம் முதலானவையும் கைகோர்த்துக் கொண்டு புது வீச்சுடன் அழகியோடு புது வகையை உருவாக்கி இருக்கிறது.

1990ஆம் ஆண்டிலிருந்து விவாதிக்கப்படும் பெண்ணியம், உடலரசியல், உட்பட அனைத்தையும் அடுத்தகட்டத்துக்கு முன் நகர்த்திச் செல்ல வேண்டியுள்ளது.

இனியனின் விடுபட்டவர்கள் ….


தம்பி இனியன் “விடுபட்டவர்கள்” நூல் வழி சக எழுத்தாளராக அறிமுகமாகி இருக்கிறான். நிலம் வர்க்கம் பால்நிலை என விளிம்புநிலை சார்ந்த , முறைசார் கல்வி கற்க இயலாத குழந்தைகளை வாழ்வில் விடுபட்ட குழந்தைகள் என தன் அனுபவத்தில் காண்கிறான் இனியன் . இனியனின் முதல் நூலிற்கு நான் எழுதிய முன்னுரையை உங்கள் வாசிப்பிற்கு தருகிறேன்.

பயணத்தின் சாட்சிகளாக…

பச்சைப் பசேலென நாற்றங்கால் பதிந்த வயல்வெளிகள், சடசடத்து வீழும் அருவிகள், ஆர்ப்பரிக்கும் ஆறுகள், தெளிந்து ஓடும் நீரோடைகள், கெச்சட்டம் போட்டு விளையாடும் பறவைகள் இப்படித்தான் கட்டிப் புரண்டு விளையாடும் சிறுவர்கள், பட்டாம்பூச்சிகளை, காகங்களை, புறாக்களை கண்டு மகிழும் மழலைகள் என ரசித்துக் கொண்டிருப்போம்.

பெரியவர்களால் நெருங்க முடியாத, அவிழ்க்க முடியாத புதிர்ப் பாதைகள் நிரம்பிய வெளி குழந்தைகளுடையதும் சிறுவர்களுடையதும். நம்மிடம் இருக்கும் ஜீபூம்பாக்களையும் சீசேக்களையும் செலுத்தி உடைக்க முடியாத தனிவழி. அருகில் இருந்து அவதானித்து மெல்ல மெல்ல பக்குவமாய் சமைக்க எடுத்துக் கொள்ளும் நேரத்தையும் உணவு இடைவேளைகளுக்கான நேரத்தையும் கூட குழந்தைகள் வெளியைப் புரிந்துகொள்ள அவர்களின் உளவியலை நெருங்கிச்செல்ல அவர்களுக்கான அறிவுக்கும் உணர்வுக்குமான தீனிகளைப் பரிமாறமுடியாமல் திணறிக் கொண்டிருக்கிறோம்.

நாம் திணறுகிறோம் என்பதை உணராமல் செல்போன், தொலைக்காட்சி, கணினி போன்றவற்றை குழந்தைகள் உலகத்திற்குள் திணித்துவிட்டு ஒதுங்கிக்கொள்கிறோம். வயது வேறுபாடின்றி எல்லா மனிதர்களும் இந்தக் கையடக்க உலகத்திற்குள் சுருட்டி வைக்கப் பட்டிருக்கிறோம்.

உலகமயமாதல் குழந்தைகள் உலகில் நுட்பமாக நுழைந்து ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. கிராமங்களைத் தொலைத்துவிட்ட குறு நகர வாழ்க்கைக்கு ஒப்புக் கொடுத்து விட்டோம். சூழலியல் சார்ந்த வாழ்க்கை முறையையும் மண் வீச்சத்தையும் துடைத்தெடுத்துவிட்டு தார்ச்சாலையாக மாற்றி இருக்கிறோம்.

பல குழந்தைகள் பள்ளிக்கு மிகவும் பசித்த வயிறுடன், குடும்பத்தின் பொருளாதார தேவைக்கான வேலைகளைச் செய்தபடி அல்லது வீட்டுவேலைகளைப் பார்த்த படியே கல்வியைத் தொடர்கின்றனர். மூன்றில் இரண்டு பங்கு மாணவர்கள் பள்ளிக்கு இடைநிற்றல் இல்லாமல் வந்தாலும், உலகெங்கிலும் உள்ள 617 மில்லியன் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் வாசிப்பு மற்றும் கணிதத்தில் குறைந்தபட்ச புலமை நிலைகளைக்கூட அடைய முடியவில்லை – என யுனிசெஃப் அறிக்கை ஒன்று சொல்வதையும் நினைவுப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஒவ்வொரு நாட்டிலும் விளிம்புநிலை மக்களின் குழந்தைகள், தலித் குழந்தைகள், நிற வேறுபாட்டில் பால் வேறுபாட்டில் சிக்கித் தவிக்கும் சிறுவர்களைக் கணக்கில் கொண்டால் என்னளவில் வகுப்பறையில் கற்காதவர்கள் உலகளவில் அதிகம் என்பேன். குறிப்பாக மூன்றாம் உலகநாடுகளில் பள்ளிச் சிறுவர்களுக்கும் அவர்களின் உளவியலுக்கும் முன்னுரிமை அளிக்காத இந்தச் சூழ்நிலையில்,
குழந்தைகளின் உலகம் உயிர்ப்போடு இருக்கக்கூடிய மாய எதார்த்த உலகம். நிகழ்காலத்தை கொண்டாடக்கூடிய உலகம். தங்களால் தங்களுக்கான தேக்கநிலையை உருவாக்கிக் கொள்ளாத உலகம். அவ்வுலகில் தொடர்ந்து பயணிக்கும்போது நம்முள் இருக்கிற குழந்தைமையும் உயிர்ப்போடிருக்கும் எனப் பேசிக் கொண்டிருக்கிறான் இனியன்.

இனியனை நான் முதலில் சந்தித்த நாளினை நினைத்துப் பார்க்கிறேன். திருவான்மியூரில் உள்ள பனுவல் அரங்கில் நடந்த கூட்டத்தில் சந்தித்தோம். தொடர்ச்சியாக என்னுடைய ’லண்டாய்’ நூல் மெய்ப்புத்திருத்தும் பணியிலும். பிறகு 2015 பெருமழை ஆண்டில் ’சென்னை எழும்’ குழுவின் களப்பணிகளை வட சென்னையில் தொடங்க முடிவு செய்து ஹேமாவதியை அழைத்துப் பேசி விட்டு இனியனுக்கு தகவல் அளித்தேன்.

பெருமழைக்காலத்தில் குழந்தைகளின் உளவியலும் அச்சமும் எப்படி இருந்தன என்பதை சிறுவர்களைச் சந்தித்தபின் என்னுடன் உரையாடியபோது பகிர்ந்துகொண்டான். வேலையைத் துறந்து, சுயநலத்துக்கான சட்டையை உதிர்த்து விட்டு குழந்தைகளுக்காக முழுநேரமும் செயல்பட இருப்பதாக என்னிடம் பகிர்ந்து கொண்டபோது மகிழ்ச்சியாக வரவேற்றேன்.

அதன்பின் பல்வேறு மாவட்டங்களில் பல அரசுப் பள்ளிக் குழந்தைகளோடு தன்னைப் பிணைத்துக் குழந்தைகள் தங்கள் சிறகுகளுக்கு வண்ணம் தீட்ட தன்னால் முடிந்த உதவிகளை செய்வதில் ஆனந்தம் கொள்பவன். தன்னை மாமா, அப்பா, தாத்தா, அண்ணன் எனக் குழந்தைகள் அழைப்பதில் பெருமகிழ்ச்சி அடைந்துக் கொண்டிருக்கிறான்.

இனியனின் தொடர் ஓட்டத்தில் கிடைத்த அனுபவங்களின் பகிர்வாக “விடுபட்டவர்கள் – இவர்களும் குழந்தைகள் தான்” என்னும் தலைப்பில் பல்வேறு விசயங்களைப் பகிர்ந்திருக்கிறான்.

குழந்தைகளுக்கான தேவைகள் குறித்தும் கவனிக்க வேண்டியவை குறித்தும் புரிந்துகொள்ள இந்நூல் மிகவும் பயன்படும். மாணவர்கள் உலகில் நுழைந்து நுட்பமான விஷயங்களை வாசகர்கள் அறிந்து கொள்ள உதவும்.

குழந்தைகள் உலகில் இனியன் மேற்கொண்டிருக்கின்ற பயணத்தின் சாட்சிகளும் மனசாட்சிகளுமாக உழல்கிற நூல் இது. தம்பி இனியனுக்கு அன்பும் வாழ்த்துகளும்.

தமிழ்க் கவிதைகளில் பெண்ணியம்


2010 ஜுன் 23-27 வரை கோயம்புத்தூரில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் முதல்பகுதி

பெண்ணியம் என்ற சொல் பெண்நிலைவாதம் ,பெண்ணுரிமை ஏற்பு ,பெண்ணுரிமை,பெண் விடுதலை என்ற சொற்பொருட்களை உள்ளடக்கியதாக விளங்குகிறது.

சமூகம் , அரசியல் , பண்பாடு , மொழி , சமயம் , குடும்பநிறுவனம் ,பணியிடம் என அனைத்து நிலையிலும் பெண்ணுக்கான இடம் என்பது மறுக்கபட்டு வருகிறது. கடைநிலை உயிரியாகக் கருதப்படும் உளவியலை பெண்ணிடமே உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது.

இந்நிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு ஆண்மேலாண்மை சமூகத்தின் , பெண்கள் மீதான கட்டமைப்பை விமர்சிப்பதாகவோ விவாதிப்பதாகவோ அமைவது பெண்ணியத்தின் கூறெனலாம். ஆணாதிக்கத்தை  எதிர்ப்பதற்குரிய இயங்குதளம் உருவாக , மொழி முக்கிய வினையாற்றக்கூடியது.   

மொழி குழப்பம் தரத்தக்கது . ஒன்றுக்கும் மேற்பட்ட அர்த்தங்களை கொண்டது. எனவே மையத்தை தகர்ப்பது என்பது மொழியின் மூலம்தான் செய்ய முடியும். -தெரிதா

சமூக அரசியல் பண்பாட்டில் பெண்மைக்கு எதிராக கட்டியமைக்கபட்டுள்ள அடக்குமுறைகளை தகர்க்க முக்கிய ஆயுதமாக மொழி விளங்குகிறது.

தமிழ்ச்சூழலில் பெண்ணியம் என்கிற சொல்லாடல் மேலை நாட்டிலிருந்து வந்ததுதான். எனினும் காலந்தோறும் நிகழும் ஒடுக்குதல்களுக்கு அடங்க மறுத்த கலகக்குரல்கள், செயல்பாடுகள் சிலவாயினும் நிகழ்ந்திருக்கலாம். அவை குறித்த பதிவுகளோ தரவுகளோ இல்லாமல் போயிருக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் மொழிவாயிலாகக் கிடைக்கும் சில தரவுகள் பெண்களின் அடங்க மறுத்த எதிர்க்குரலை ,விடுதலை உணர்வை வெளிப்படுத்தி உள்ளதை காணலாம்.

இந்நிலையில் கவிதையில் பெண்ணியத்திற்கான இடம் குறித்த பார்வை அவசியமாகிறது.

கவிதைகளில் பெண் குறித்தான பார்வை

பழந்தமிழ்க் கவிதைகளில் பெண்பாற் கவிஞர்களின் எழுச்சி பெற்ற உளவியலையும் சுதந்திரத்தையும் அறியக் கிடைப்பது போன்றே , நிலவுடைமையின் பிடியில் சிக்கி தவிக்கும், பெண் மீதான கருத்தியல்கள் பெண் அடிமைத்தனத்தின் உட்சபட்சமாக விளங்கியதை அறிகிறோம். 

களவு ஒழுக்கத்தின் பொழுது இற்செறிக்கப்படுகிற பெண்டிர் , உடன்போக்குக்கு துணிந்த பெண்டிரை தாய் தேடிச் செல்லுதல் , கற்பு நெறியைக் கடைபிடிக்க கைமை நோற்கும் கொடுமையை விடுத்து உடன்கட்டை ஏறத்துணிந்த பெருங்கோப்பெண்டு முதலான பெண்ணின் அத்துணை பரிமாணங்களையும் காணலாம்.  விடுதலையை சுவாசித்தலும் அடிமைக் கற்பை சுமத்தலும் எனும் இருவேறு  துருவங்களை தமிழ்க் கவிதை மரபில் உய்துணர இயலும்


பக்தி இலக்கியம் காலம் முதலாக பெண்ணை மாயப்பேய் என்று பெண்ணுடலை இழிவாகப் புறந்தள்ளும் வியூகத்தை நடைமுறைப்படுத்த தொடங்கினர். பெண் உடலை பார்ப்பவனைக் காட்டிலும் அந்த உடலுக்கு உடைமையான பெண்ணை குற்றவாளியாக்குதல் , முதலான தன்மையில் இருந்து முற்றிலும் மாறுபட்டு , பக்தி இலக்கிய காலத்தில் ஆண்டாள் காரைக்காலம்மையாரின் மீவெழுச்சி நிலை , அகத்தூண்டலை வெளிப்படுத்த தயக்கமற்ற ஆளுமையைத் தெரிவிக்கிறது.

சிற்றிலக்கிய காலத்தில் மண்சார்ந்த பெண்களைப் பாடியுள்ளனர். குறத்தி பள்ளி முதலான ஐவகைநிலப் பெண்களைப் போன்றே குறுநிலம் சார்ந்த பெண்களின் சிறப்பை அறிகிறோம்.பெண்களின் எழுத்து இக்காலத்திலும் வெற்றிடத்தையே கொண்டிருந்தது.                      

மறுமலர்ச்சி காலக்கட்டத்தில் பெண்விடுதலைப் பேசிய பாரதி முதல்
தங்கள் உரிமையைத் தாங்களே எடுத்துக் கொள்வதுதான் விடுதலைக்கான அடிநாதம் என்று வலியுறுத்துகிற தற்காலக் கவிஞர்கள் வரையிலுமான பரந்த பரப்பில், பெண்ணைத் தாயாக உயர்த்திப் போற்றுதல் , பெண்களின்
சிக்கல்களைப் பேசி விட்டு தீர்வினைப் பேசாத கவிதைகள் , பெண்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையான கவிதைகள் என்று தற்காலக் கவிதைகளைப் பகுக்கலாம்.        

போர்ச்சூழலில் பெண் -4


சாவோ கடற்கரையில் இளம் நங்கை எனும் பூ-டக்-ஐ என்பாரது நாவல் வியட்நாம் நாட்டில் பிரெஞ்சு ஆதிக்கத்திற்கு எதிராக வடபகுதியில் நடந்த போராட்ட்த்தைக் களமாகக் கொண்ட புனைவு இப்படி போர்க்களம் சிதைத்துவரும் மக்களைக்குறித்து பெண்களே பதிவு செய்துள்ள குறிப்புகள் ,புத்தகங்களாகிக் கொண்டிருக்கின்றன.

பெயரிடாத நட்சத்திரங்கள் எனும் தொகுப்பு 26 போராளிப்பெண்களின் கவிதைகளைத்தாங்கி வந்துள்ளது.மிக முக்கியமான தலைமைப்பொறுப்புகளில் பணியாற்றிய பெண்கவிஞர்கள் இவர்கள்.

கோனேஸ்வரிகளும் மன்னெம்பெரிகளும் போர்க்களத்தில் சூறையாடப்படுவதோடு இன அழிப்பு என்கிற நிலையில் கட்டவிழ்ந்த வன்முறையில் அவர்கள் இனத்தினை தூயமரபு எனக்கூறி பெருமை பேசிவிட முடியாதபடிக்கு இனப்பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்துகின்றனர்.சந்ததியினை ஈன்றுதருகிற பெண்களின் யோனிப்பாதைக்குள் குண்டுகளை வைத்து வெடிக்கச்செய்தனர்.

இனப்பெருமைக்குள் மூழ்கிக்கிடப்பவர்கள் பெண்கள் எழுத்தும் கலையும் பெண்ணுறுப்புகளை அவையங்களை வெளிப்படையாக சித்திரிப்பதை பெண் மொழி கலை என்பதனை விமர்சனம் செய்கிறார்கள்.பெண் எழுத்தாளர்கள் என்றால் காமக்கதைபேசும் கூச்சமற்ற கூட்டமென பரப்புரை செய்து யோனிக்கும் முலைக்கும் பாதுகாவலாக நிற்கிறவர்கள்.வீரம் பொருந்திய பெண் எழுத்துகளை வாசித்திருக்கிறார்களா?அவர்களின் வலிகளை உணர்ந்திருக்கிறார்களா?யோனிப்பாதையை,கருவறையை வெடிக்கச் செய்கிற இனவெறிக்கு எதிராக எத்தனை படைப்புகளைத் தந்திருக்கிறார்கள் .

ஏகாதிபத்தியம் பெண்களைச் சந்தைக்காக நிர்வாணமாக்கினால் மதங்கள் பெண்களைக் காக்க கட்டமைக்கிற பெண்ணுக்கான அத்தனை பண்பாட்டு வழமைகளும் போர்ச்சூழலில் ஏளனத்திற்கு  உள்ளாகிறது என்பதே உண்மை.

பெண்களைப் பொத்திப்பொத்தி பாதுகாக்கிற ஆணாதிக்கம் கட்டமைத்திருக்கிற அத்தனைக் கூறுகளும் வெட்கி தலைகுனிகிறது.ஒழுக்கம் கற்பு என்கிற சொற்கள் அர்த்தமிழக்கின்றன.பெண்கள் தங்களின் பாலுணர்வை வெளிப்படுத்தக் கூடாது .அதைப் பேசக்கூடாதென பின்பற்றப்படுகிற கடுமையான தடைகள் பொடிந்து போகின்றன.வல்லுறவுக்குப் பின்னாக பெண்கள் நாளொன்றுக்கு எத்தனை முறை வல்லுறவை எதிர்கொண்டார்கள் என்பதனை வெளிப்படையாகப் பேசவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.

மதம்,பண்பாடு கட்டமைக்கிற அனைத்தும் ஒரு துளியும் பொருளற்றதாக போர்ச்சூழலில் மாறிவிடுகிறது.இந்நிலையில் மத அடிப்படைவாதிகள் தங்கள் இனப்பெண்களைப் பாதுகாக்கிறதாகக் கருதிக்கொண்டு செய்கிற அத்துணை விடயங்களும் புர்கா,தாலி எனும் சடங்கார்த்தமான அனைத்தும் ஏதுமில்லாமல் போகிறது.கோணேஸ்வரிகளின்  யோனி சிதைப்பை ஆஃப்ரிக்க பெண்ணடிமை பண்பாட்டு மரபான பெண்ணுறுப்பு தைத்தல் காப்பாற்றி விடுமா?

போர்ச்சூழலில் தொடர்ந்து பெண்கள் தங்களையும் குழந்தைகளையும் காத்துக் கொள்வதற்கு சமூக,அரசியல்,பொருளாதாரம் சார்ந்த பொது வெளியில் மேலதிகமாக இறங்க வேண்டிய தேவை இருக்கிறது.இனத்தூய்மைக்காக பொத்திவைக்கிற விதிமுறைகள் செல்லாக்காசாகிறது.தற்போதும் உளவுத்துறைகளில் இராணுவப் படையணியில் பெண்கள் அதிகமாக ஈடுபட்டுவருகின்றனர்.நிலம் அபகரிக்கப்படுவதைப் போன்றே மொழி கலை பண்பாடு உணவு சிதைக்கப்படுவதைப் போன்றே பெண்களும் சிதைக்கப் படுகின்றனர்.

எனதுகுரல்

மாண்டவர்கள் மத்தியில்

மீண்டும் ஒலிக்கும்..

இந்த யுகம் முடிந்து

புதுயுகம் தொடங்கும் போது

எனது வார்த்தை

மீண்டும் உயிர்பெற்றெழும்

இறந்தவர்களின் நினைவாக குவாரானி மக்கள் பாடும் பாடல்

போர்ச்சூழலில் பெண் -3


பெண்களின் மீதான பாலியல் வன்முறை என்பது போர்க்குற்றம்,மனிதத்திற்கு எதிரான குற்றம்,இனப்படுகொலை,சித்திரவதை ஆகியவற்றில் ஆகக்கடைசியாக மட்டுமே பார்க்கப் படுகிறது.இந்நிலையில் உச்சபட்சமான அனைத்தையும் சந்திக்கிறவளாக பெண் இருக்கிறாள்.

பாலஸ்தீன அமெரிக்க பெண் கவிஞரான லேனா கலாஃப் டுஃபாஹாவின் ஓடுவதற்கான உத்தரவு எனும் கவிதை போர்ச்சூழலின் அவலத்தைப் பேசுகிறது.

“அவர்கள் போன் செய்து ஓடச் சொல்கிறார்கள்
——
ஓடுவதற்கு ஒரு இடமும் இல்லையென்றாலும் கூட

இதற்கு எந்த அர்த்தமும் இல்லை

எல்லைகள் மூடப்பட்டுவிட்டன உங்கள் கடவுச்சீட்டு

செல்லாமல் போய்விட்டது

கடலால் சூழப்பட்ட இந்த இடத்தில் நீங்கள்

ஆயுள் கைதியாக இருக்கிறீர்கள்

பாதைகள் குறுகிப்போய்விட்டன

உலகில் வேறு எந்த இடத்தைவிடவும் மனிதர்கள்

நெருக்கியடித்துக்கொண்டு வாழும் பகுதி இது
…….
வீட்டிலுள்ளவர்களைக்கூப்பிடக்கூட முடியாது

எதுவும் பொருட்டல்ல

நீங்கள் யாரென்பது கூட பொருட்டல்ல

நீங்கள் மனிதர்கள் தான் என்பதை நிரூபியுங்கள்

நீங்கள் இரண்டு கால்களில்தான் நிற்கிறீர்கள்

என்பதை நிரூபியுங்கள்

ஓடுங்கள்(ப 33 ,குரல் என்பது மொழியின் விடியல்)என்கிற 
பதட்டம் ,உயிரச்சம் ,இக்கவிதையில் விரிவாகபேசப்படுகிறது.

போர் மனிதன் உருவாக்கிய பண்பாடு ,நாகரிகம் சார்ந்த அனைத்தையும் துச்சமாக்குகிறது. பாலியல் வன்முறைக்கு எதிராக போருக்கு இடையிலும் பாதுகாத்துக்கொள்ள பெண்களுக்கு 
அனைத்துவிதமான உரிமைகளும் உள்ளன.அதே நேரம் பாதிக்கப்பட்டவர்கள் நஷ்ட ஈடுபெறலாம் என பெண்களுக்காக 
சொல்லும் அதே சட்டம் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வல்லுறவு குற்றம் இழைத்தவனுக்கும் பொது மன்னிப்பு வழங்கலாமென 
(சர்வதேச சட்டம் Act. 7 CEDAW; Rome Statute Statute 8(2)(b)(xxii)) கூறுகிறது.

இப்படியான சட்டங்கள் ஒருசார்பு நியாயத்திற்கானவையாகவே இருக்கிறது.போர்சூழ்ந்த அத்தனை இடங்களிலும் பெண்கள் சித்திரவதைகளுக்கும் வன்புணர்வுக்கும் உள்ளாக்கப்பட்டதாற்கான சாட்சிகளும் தடயங்களும் இருக்கின்றன. இன்றைய உடகங்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அப்படியிருந்தும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா? வலிமையானவர்களின் கூலிகள் தங்கள் பலத்தை கீழிருப்பவர்கள் மீது அதிலும் கடைசியாக சிறுமிகள் மீது ஏவுவது என்பதில் இச்செயலானது பெண்களும் சிறுமிகளும் இறையாண்மை,வல்லாண்மை,ஏகாதிபத்தியம் என இவை அனைத்தின் மீதும் காறி உமிழ்கின்றனர்.இவை அனைத்தும் அர்த்தமற்ற பொருளற்ற வார்த்தைகளாக அரசின் அகராதிகளில் பங்கு பற்றியிருக்கிறது.

புதிய சர்வதேச பொருளாதார ஒழுங்கு முறையையே மக்கள் 
விரும்புகின்றனர்.அத்துடன் ஒரு புதிய சர்வதேச அரசியல் 
ஒழுங்கும்கூட அவசரமாகத் தேவைப்படுகிறது.”எதிரி தாக்குவதற்கு முன்பே தாக்கும் போர் நடவடிக்கை”போன்ற புதிய கோட்பாடுகளைத் திணிப்பதற்காக,சர்வதேசச் சட்டக்கொள்கைகளுக்குப் புதிய மறு விளக்கங்களை அளிப்பதற்கு சிலநாடுகளை நாம் அனுமதிக்கக் கூடாது.


ஓ! தாக்கப்படுவதற்கு முன்பே தாக்கும் போர் நடவடிக்கை 
யுத்தம் என்று அவர்கள் நம்மை அச்சுறுத்துகிறார்களா?பாதுகாப்பதற்கான பொறுப்பு எனும் கோட்பாடு என்னவாயிற்று? நம்மை யார் பாதுகாக்கப் போகிறார்கள்? –ஹியூகோ சாவேஸ்-வெனிசுலா என ஐ.நாவின் வீட்டா அதிகாரம் குறித்து பேசுகிற சாவேஸின் உரை கவனிக்கத்தக்கது.அமைதியை ஏற்படுத்துவதாக சொல்கிற எந்த ஒரு இராணுவ நடவடிக்கையும் பெண்களை மோசமாகவே நடத்துகிறது.

 1994 இல் ருவாண்டா இன அழிப்புப்போரில் 2,50,000-5,00,000  பெண்களும் சிறுமிகளும் பாலியல் வன்புணர்வில் உட்படுத்தப்பட்டனர்.1990 இல் போஸ்னியாவில் 20,000-50,000 பெண்களும் சிறுமிகளும் பாலியல் வன்புணர்வில் உட்படுத்தப்பட்டனர். 50,000 64,000 பெண்கள் சியராலியோனில் பாலியல் தாக்குதலுக்கு 
உள்ளானார்கள் என்கிற புள்ளிவிவரங்கள் மிகத்துல்லி யமானவை இல்லை.ஏனெனில் மக்கள் இறப்புகளையும் வன்புணர்வுகளையும் சுயநலம் கருதி பதிவே செய்யாமல் இருட்டடிப்பு செய்கிற நிலையில் பதிவு செய்கிறபோது குறைத்துக் காட்டுகிற போக்கே நிலவுகிறது.

ஐ.நாவில் தலைமைத்துவம் வாய்ந்த அமைதித்தூதுவர்களாக பெண்கள் நியமிக்கப்படாத நிலையில் கென்ய நெருக்கடிநிலையின் போது 2008 இல் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மூன்று பெண்கள் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள் என்கிற செய்தி சமூக,அரசியல் களத்தில் பெண்கள் பின்னுக்கு உள்ள நிலைக்கான சான்றாகும்.

1960 இல் நைஜீரியாவில் இக்போ என்றழைக்கப்படுகிற 
இனத்திற்கு எதிராக நடைபெறுகிற கோரப்படுகொலைகள்,இன அழித்தொழிப்பு வேலைகள் எவ்வாறு வல்லரசுகளின் திட்டமிடலுடன் நிகழ்த்தப்பட்டன என்பதைப் பதிவு செய்கிறது.  பயாஃப்ராவை நோக்கி என்கிற புச்சி எமசட்டாவின் நாவல் .இப்போரில் ஒரு லட்சம் இக்போக்கள் அழிக்கப்பட்டனர்.

அதன்பதினாறாம் அத்தியாயம் பெண்களின் யுத்தம் 
என்பதாகும்.
அதில் பெண்களின் மன வலிமை எதிர்ப்பாற்றல்,
தாய்மையோடு குழந்தைகளை சுமந்தோடும் அலைக்கழிப்பு,
கன்னியாஸ்திரிகள் முதியவர்கள் என்ற பேதமின்றி வல்லுறவு நிகழ்த்தப்படுவதும்.குழந்தைகளை குண்டுகளால் துளைத்துக் கொல்வதுமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.இப்போர்ச்சூழலில்
 பட்டினி கிடந்தே இறந்துபோன எட்டு வயது அண்ணன் மகளின் பெயரைப் புனைப்பெயராகக் கொண்டவர்தான் புச்சி எமசட்டா..

ஆனிஃப்ராங்க் டைரிக்குறிப்பு ,ஜீன் 14 1942 முதல் 22 நாட்கள் இயல்பு வாழ்க்கை 1944 முதல் ஒளிந்துவாழும் வாழ்க்கை பற்றிய 13 வயது பெண்னின் டைரிக்குறிப்பு.
ஹிட்லரால் கொலப்பட்ட யூதர்கள் குறித்த முக்கியமான குறிப்புகளைக்கொண்ட்து.வரலாற்று ஆவணமாக அனொனிமாவைப்போல ,பயாஃப்ராவைப் போல முக்கியத்துவம் கொண்டது.ஏனெனில் இவை வரலாற்றின் இருண்ட பக்கங்களைப் பேசுகிறது.மக்களின் மனசாட்சிகளாக நின்று பேசுகிறது.

போர்ச்சூழலில் பெண்-2


ஹிட்லரின் உயிருக்கு பாதுகாப்பில்லை அவருக்கான உணவில் விஷம் கலந்திருந்த நடவடிக்கையில் அவரது ஒவ்வொரு வேளை உணவையும் சாப்பிட்டு பரிசோதிக்க ஒரே பெண்ணை கட்டாயமாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.இப்படியான தொடர் அனுபவங்களால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உயிரச்சம் சார்ந்த அவலம் சொல்லொணாதது. உலகமெங்கிலும் எல்லைக்கோடுகளுக்கு 
மத்தியிலும் உள்ளுமாக பல்வேறு தாக்குதல்கள் தொடர்ந்து 
நடைபெற்று வருகிறது.இவை போர் என்னும் பொதுச்சொல்லாக வழங்கப்பட்டாலும் அவற்றுக்கான காரணங்களாக பல கூறப்பட்டாலும் எல்லா போர்களும் மண்ணை குருதியால் 
நனைக்கின்றன.நீர்பாய்ச்சி பசுமையாக்க வேண்டிய 
பகுதிகளை குருதியால் குளிப்பாட்டுகின்றனர்.

ஏகாதிபத்தியத்தின் 
போர்,ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போர்,புனிதப்போர் தொடங்கி இனம்,மதம் எனும்  பல்வேறு நுண்கூறுகளாக அதற்குரிய காரணங்களைக் கூறலாம்.ஆயினும் பெண்களைப் பொறுத்த
வரையில் போர் என்பது பெண்களின் மீதும் குழந்தைகள் மீதும் தான் நடத்தப் படுகிறது.மொத்தத்தில் அனைத்து உயிரினங்களும் தாக்கப்பட்டாலும் பால்பேதமற்று மனிதர்கள் 
தாக்கப்பட்டாலும் போர்க்களத்திலிருக்கும் ஆண்பாலினம் உச்சபட்சமான மிருகத்தாக்குதலை மனிதாபிமானமின்றி பெண்கள் மீது நடத்துகிறது.மிருகத்தனமான பாலியல் தேவைக்கும் ,இயற்கையின் இயல்பான இன உற்பத்தி சாதனமாக பெண்கள் பார்க்கப்படுவதால் உச்சபட்சமான தாக்குதலைப் பெண்கள் மீது நிகழ்த்துகின்றனர்.

“பிழைத்திருக்கும் தருணம் என்பது அதிகாரத்தின் தருணமாக இருக்கிறது.இறந்த ஒருவரைப் பார்க்கும் போதுஏற்படும் பீதி 
இறந்து போனவர் யாரோ ஒருவர்தான் என்ற நினைவால் திருப்தியாக மாறுகிறது.” –எலியா கனெட்டி,(அதிகாரத்தின் மூலக்கூறுகள்-ப 16) உயிர் பிழைக்கும் ஒவ்வொருவரும் தப்பித்தோம் என்கிற 
தற்காலிக நிம்மதியையும் அதிகாரத்திற்கு எதிராக ஏதும் செய்ய முடியாமலிருக்கிற நிரந்தரமான குற்றவுணர்வையும் ஏற்படுத்துகிறது.

சார்லிசாப்ளின் “தி கிரேட் டிக்டேட்டர்” என்ற முழுநீள 
திரைப்படத்தை எடுத்தார் .இதுதான் இவரின் முதல் பேசும் படம் .ஹிட்லரை விமர்சித்து நகைச்சுவை உணர்வோடு எடுக்கப்பட்ட படம்.இத்திரைப்படத்தை எடுத்துக்கொண்டிருந்தபோதும் வெளியிட்டபோதும் பல்வேறு தடைகள் எழுந்தன .திரையிட்ட பின் 
மக்கள் ஆதரவு கிடைத்தது.இப்படம் முழுவதும் நாஜிகளின் சர்வாதிகாரத்தை விமர்சித்த போர் எதிர்ப்புப் படமாகும்.ஒரு 
கலைஞன் தன்னை தன் இயலாமையிலிருந்து காப்பாற்றிக்
கொள்ள வேண்டிய தேவையிருக்கிறது.ஏதும் செய்ய முடியவில்லை என்ற இடத்திலிருந்து நகர்ந்து அவனது கலையின் மூலம் 
எழுத்தின் மூலம் தன் விமர்சனத்தை உலகுக்கு அறிவிக்கிறான்.நடைபெறும் போருக்கு முடிவு உண்டு அதன் வலிகளின் மீதும் பாதிப்பின் மீதும் எழும் இலக்கியத்திற்கு முடிவு இல்லை.படைப்புகள் தான் எழுத மறந்த வரலாறாக மக்களின் மனசாட்சியாக 
நின்று பேசிக்கொண்டிருக்கிறது.

ஏகாதிபத்தியம் தன் வளத்திற்காக வலிமைக்காக நிலம்,பொருளாதாரம் இரண்டையும் தன்வசம் வைக்க மதத்தைச் சூழ்ச்சிக்குப் பயன்படுத்துகிறது.ஆனால் இவை அனைத்தும் பெண்களை உயிராகப் பார்க்காமல் அவமதிக்கிறது.மனித்த்தன்மையற்ற முறையில் பெண்ணை நடத்துகிறது வல்லுறவு நாசங்களை அரங்கேற்றுகிறது.ஓலங்களை அதன் வலியை இரசிக்கிறது.ஏகாதிபத்தியம் நிகழ்த்துகிற அத்துணையும் உயிர்களை உயிர்களாக நட்த்துவதில்லை என்பதுதான்.

ஹெய்த்தியின் இன்றைய நிலை முன்னேற்றத்திற்கு உதவுவதான போக்கில் தீராத பொருளாதாரச் சரிவை ஏற்படுத்தியதுடன் வளங்கொழிக்கும் நிலத்தை தரிசாக்குகிறது.உலகநாடுகளின் வளமாகப் பார்க்கப்படும் பயிர் வளங்களுக்கு காப்பீடு செய்துக்கொள்ள அவசரப் படுகிற ஏகாதிபத்தியம் வெள்ளைத்தாள்களில் எழுதப்படும் மையின் மூலமாக அனைவரையும் அனைத்தையும் அடக்கி வசப்படுத்தப் பார்க்கிறது.மற்றொருநிலையில் மரபான விதைப்பாரம்பரியத்தை அழிக்க செய்கிறது.மாற்றுவிதைகளைக் கொடுத்து நூற்றாண்டுகளாக வீரியம் ஏற்றப்பட்ட  பாரம்பரிய விதைமரபை முற்றாக அழிக்க நினைக்கிற நரித்தனத்தை செய்கிறது.

இந்த இடத்தில் சூழலியல் பெண்ணியம் என்கிற கருத்தாக்கம் எத்துணை சரியானது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.கென்யாவில் வங்காரிமாத்தாய் சூழலியல் சார்ந்து ஆற்றிய பணிகளும் சொந்த நாட்டில் ஆரம்பத்தில் ஒடுக்கும் முயற்சிகள் நடந்தது.இந்தியாவில் மணிப்புரில் இரோம் ஷர்மிளா சொந்த மாநிலப் பிரச்சனைக்காக காந்திய முறையில் உண்ணா நோன்பு இருந்து வருகிறார்.குறிப்பாக இராணுவத்தினரின் விசாரணையற்ற துப்பாக்கிசூடு ,பெண்களை மென்று துப்பும் செயல் இதற்காக தொடங்கிய போராட்டத்தை இத்துணை ஆண்டுகளாக நடத்திவந்திருக்கிறார்.அவள் உடல் தளர்ந்து விட்டது.மன உறுதி மட்டும் குறையவே இல்லை இரும்பின் வைரத்தின் உறுதியைக் கொண்டிருக்கிறது.ஆணாதிக்கத்தின் அரசுகளின் ஆதிக்கத்தின் பிடி பெண்களை நடத்துவது இவ்வாறு இருக்க போர்முனையில் பெண் மீதான வன்முறை எண்ணிப் பார்க்கவியலாதது.  

 அனொனிமா எனும் முகமற்றவள் என்கிற புத்தகம்,இரண்டாம் உலகப்போரில் நிலவறையில் பதுங்கி உயிர்காத்துக்கொள்ள ஓடிய நிலையில் எழுதப்பட்ட குறிப்புகள் எல்லா கொலைகளும் ,வன்புணர்வுகளும் ,கருச்சிதைப்புகளும்,
பாலியல்வக்கிரங்களும்,கொள்ளையடிப்புகளும் ’யுத்தமென்றால்’இதெல்லாம் நடக்கும்தானே என்று உதட்டைப் பிதுக்கி கடந்து போக உலகம் பழக்கி இருக்கிறது.ஆனால் அனொனிமா இந்த பொதுப் புத்தியிலிருந்து எதிர் திசையில் மறித்து நிற்கிறாள் .ஏனெனில் அவள் யுத்தத்தின் பார்வையாளராகவோ ,பங்கெடுப்பாளராகவோ இருந்திருக்கவில்லை.யுத்தம் அவள் மீதேதான் நடந்து முடிந்திருக்கிறது. 

ஆண்மை வீரம் போன்ற கற்பிதங்களின் உள்ளீடற்ற பொக்கைத்தனங்களை இரக்கமற்ற மொழியில் குத்திக்காட்டுகிறது.கண்ணுக்குள் பெண்ணை வைத்து காத்து வளர்க்கத்துடிக்கும் ஆணின் கட்டுப் பெட்டித்தனம் மீது காறி உமிழ்கிறது.தன்னளவில் சுயமாய் வாழ்வதற்கான பெண்ணின் விழைவுகளை முன் மொழிகிறது.மான அவமான மயக்கங்களில் சிக்கி வாழ்வைத்தொலைக்கிற கோழைத்தனத்திலிருந்து விடுபட்டு ஒவ்வொரு நொடியையும் வாழ்ந்து பார்ப்பதற்கான வேட்கையை மூட்டுவதாக கூறப்பட்டிருப்பது போலவே இக்குறிப்புகள்

அக்கால சூழலை,உணவு சேமிக்க வேண்டிய கட்டாயம்,அலைக்கழிவு,எதிரிகளின் கொடுமை,தண்ணீர் பிரச்சனை,வானத்தின் கீழான பாதுகாப்பற்ற வாழ்க்கை,வல்லுறவு யாரென தெரியாத பலரும்   வயது வித்தியாசமில்லாமல் பயன்படுத்தி சக்கையென போடுவது,உணவுக்காக காத்திருந்து பெறுவது,சூறையாடி கடைகளிலிருந்து கொண்டுபோவது நிலவறையும் பாதுகாப்பின்றி போனதால் வீட்டின் பரண்களில் சிறுமிகளைப் பதுக்குவது இப்படியான மோசமான எல்லா போர்நிலத்திற்கான பதிவாக வெளிப்படுகிறது.

 கடந்த இருபது ஆண்டுகளில் பனிப்போருக்குப் பின்பாக 45 போர்ச்சூழ்நிலைகள் உருவானபோது அதைத் தடுக்க 300 அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.அதில் 10 போர்சூழலில்  (புருண்டி, காங்கோ, 
சூடான், பிலிப்பைன்ஸ் , நேபால், உகாண்டா, குவாத்தமாலா, 
மற்றும் சியாபாஸ் முதலான 18 இடங்களில் பாலியல் வன்முறை நிகழ்ந்ததாக பதிவாகியுள்ளன.

துயருற்ற என் தேசமே
காதல்கவிதைகள் எழுதும் கவிஞனான 
என்னை ஒரு நொடியில்
கத்தியினால் கவிதை எழுதும்
கவிஞனாக மாற்றினாய்
 –நிசார் கப்பானி
அரபுக்கவிஞர் இப்படி வாழ்க்கை திட்டமிடமுடியாததாக போரின் போக்குகளால் சொந்த இயல்பை இழந்து ஓட வேண்டியவராகின்றனர்