ஆண்பால் பெண்பால் அன்பால்


image-7
 `ஒரு சமூகத்தின் வளர்ச்சி என்பது, அந்தச் சமூகத்தில் உள்ள பெண்களின் முன்னேற்றத்தைப் பொறுத்தது.’ –  டாக்டர் அம்பேத்கர்.
அதிகம் வளர்ச்சியடையாத, சென்னைப் புறநகரில் அமைந்துள்ள ஓர் அரசுப் பள்ளி அது. கடுமையான கட்டுப்பாடுகள் கிடையாது. எப்போதும் விளையாட்டுதான். அங்குதான் நான் படித்தேன். எனக்கு விளையாட்டுப் போட்டிகளில் நிறையவே ஆர்வம். ஆனால், அம்மாவுக்கு விளையாட்டு என்றாலே பிடிக்காது. எப்போதும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் எனக் கறார் காட்டுவார். `அம்மா ஏன் இப்படி நம்மை அடைத்து வைக்கிறார்?’ என்று எனக்கு ஆத்திரம் வரும். ஆனால், அடிக்கு பயந்து அமைதியாக இருந்துவிடுவேன்.
அம்மா, அபூர்வமாக வாசிப்பவர். அந்த வாசிப்பின் வழியேதான் எனக்கும் புத்தகங்கள் அறிமுகமாகின. இங்கே வீட்டுக்குள் அடைத்துவைக்கப்பட்ட எல்லாப் பெண்களுக்கும் புத்தகம்தான் உலகத்துக்கான ஜன்னல்களாக மாறுகின்றன. `பொன்னியின் செல்வன்’ நாவலை ஏழாம் வகுப்பு படித்தபோது வாசித்தேன். செம்பியன்மாதேவியும் பூங்குழலியும் நிஜத்தில் பார்க்கும் பெண்களைப்போல் இல்லை.  பூங்குழலியின் படகில் நானும் ஏறி ஆனையிறவுக்குப் பயணிப்பதாக அவ்வப்போது கற்பனை சிறகடிக்கும்.
அதிகாலையில் எழும் பழக்கம் எனக்கு இயல்பாகவே இருந்தது. காலையில் வாசலில் சாணி தெளித்து, பக்கத்துத் தெரு கிணற்றில் பதினைந்து குடம் தண்ணீர் இறைத்து வைத்துவிட்டு, அம்மா உதவியோடு சமையல் முடித்து, மதிய உணவைக் கட்டிக்கொண்டு தங்கையின் கைப்பிடித்து பள்ளிக்குக் கிளம்புவேன்.  எட்டாம் வகுப்பு விடுமுறை முடிந்து, ஒன்பதாம் வகுப்புக்குச் செல்லத் தயாரானேன். திடீரென, ‘இனி, பள்ளிக்கூடம் போக வேண்டாம்’ என்றார் அம்மா. அதிர்ந்துபோனேன்!
பள்ளிக்குப் போக வேண்டாம் என்பதற்கு அம்மா கூறிய காரணம், `வீட்டைப் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்பதே.  பல அம்மாக்களைப்போலத்தான் என் அம்மாவும்.  குடும்ப நலன், குழந்தைகள் நலன் தாண்டி அவருக்கு யோசிக்கத் தெரியாது. என்னை வீட்டிலே வைத்திருப்பது அவருக்குப் பாதுகாப்பாகத் தெரிந்தது. ஆனால், என்னுடைய பிடிவாதம்தான் எனக்கான படிப்பைப் பெற்றுத்தந்தது.
ஒன்பதாம் வகுப்பிலேயே என் படிப்பை நிறுத்த அம்மா நினைத்தபோது, அரசுப் பள்ளிக்குக் கட்டவேண்டிய குறைந்த கட்டணத்துக்காக, எனக்குத் தெரிந்த வேலையின் மூலம் கொஞ்சம் பணம் சேகரிக்க நினைத்தேன். முன்பே தெரிந்திருந்தால் தாய்மாமா, சித்தப்பாவிடம் வாங்கியிருக்கலாம். இனி அதை யோசிக்க முடியாது. வேறு என்ன செய்ய? வேலைவாய்ப்புகளே இல்லாத பகுதியில் என்ன வேலை செய்வது? பள்ளிக்குச் சென்றால் ஆசிரியர்களின் நச்சரிப்பு வேறு. நான் சம்பாதித்துப் பணம் கட்ட வேண்டும் என முடிவுசெய்தேன். அதற்கு எனக்கு உறுதுணையாக இருந்தவன் என் நண்பன்.
எங்கள் பகுதியில் இருப்பவர்களின் தேவைக்கு ஏற்ற பொருளை விற்கலாம். ஆனால், மூலதனம் இல்லாததாக இருக்க வேண்டும். அப்போது எங்கள் பகுதியில் விறகு அடுப்பு பயன்படுத்தினார்கள். மண்ணெண்ணெய் ஸ்டவ்கூட கிடையாது. அதனால் வறட்டிக்கு நல்ல தேவை இருந்தது. பள்ளி முடிந்தவுடன் வீட்டுக்கு அருகே இருந்த ஏரி ஓரத்தில் சாணம் கிடைக்கிறதா எனத் தேடுவேன். என் நண்பன் அவனுடைய சைக்கிளைக் கொண்டுவந்து சாணிக்கூடையைக் கேரியரில் வைத்து தள்ளிக்கொண்டு வருவான். வறட்டி விற்றுக் காசு சேர்க்க ஆரம்பித்தேன். படிப்பு தொடர்ந்தது.
`என் பள்ளிப் படிப்பை நிறுத்த நினைத்தவர்கள் என் பெற்றோர்’ என்றுதான் அப்போதெல்லாம் நினைத்து நினைத்து வேதனைப்படுவேன். ஆனால், அது பெற்றோருக்குச் சமூகம் தந்த நெருக்கடி என்பதைப் பின்னாளில் பெரியாரைப் படித்தபோது புரிந்துகொண்டேன். என்னைப் போன்ற பெரும்பாலான பெண்கள் அதுபோன்ற நெருக்கடிகளைச் சந்திக்கிறார்கள் என்பதே சமூக யதார்த்தம். என் பள்ளியில், பல தோழிகள் படிப்பைப் பாதியில் கைவிட நேர்ந்தது. வருகைப்பதிவேட்டில் பல பெயர்கள் நீக்கப்பட்டன. முதல் ரேங்க் வாங்கும் பெண்கள் எல்லாரும், புத்தகப் பைகள் பிடுங்கப்பட்டு, தாலியும் கணவனுமாக நின்றனர்.
மனித மனங்களைத் தகவமைக்கும் பண்பாட்டு நிறுவனங்களிலேயே, பெண்ணின் இருப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தகவமைக்கும் பண்பாட்டுத் தொழிற்சாலையாக, குடும்பம்தான் இருக்கிறது. அதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறு நீதிகள். எப்போதும் சமனற்ற தராசுத்தட்டைச் சுமக்கவைக்கிறது ஆணாதிக்கக் குடும்ப நிறுவனம்.
நான் பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதினேன். ப்ளஸ் டூ முடித்துக் கல்லூரிக்குச் செல்லும் கனவுகளோடு இருந்தேன். தேர்வு முடிவு வெளிவருவதற்கு முன்பே திருமணம் நிச்சயமானது. கல்வி கற்பதற்கான என் விருப்பத்தை, பிடிவாதத்துடன் வீட்டில் சொன்னேன். எல்லோருக்குமே அதிர்ச்சி. `அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்’ என்பதுதான் எல்லோருடைய பதில். என் அத்தையோ பழனியோ படிப்புக்குத் தடைபோடவில்லை (அத்தை மகன் பழனிதான் என் கணவர்). படிப்பைத் தொடர ஒப்புக்கொண்டனர்.
நிச்சயதார்த்தம் முடிந்தாலும், `பதினொன்றாம் வகுப்புக்குப் பள்ளியில் சேர்க்க மாட்டேன்’ என்றார் அப்பா. ‘நிச்சயமான பெண்ணை வீட்டைவிட்டு அனுப்ப முடியாது. கல்யாணத்துக்குப் பிறகு படிக்கட்டும்’ என அம்மாவும் கறாராகச் சொல்லிவிட்டார்கள். என்ன செய்வதென்றே தெரியவில்லை. தூக்கம் தொலைந்தது. இரவெல்லாம் அழுதுகொண்டிருப்பேன். அந்த நேரத்தில் ஆறுதலாக இருந்தவர் என் அத்தைதான். அத்தைக்குத் தகவல் சொன்னேன். பெற்றோரிடம் அத்தை பேசிப் பார்த்தார். பலனில்லை. `என்னோடு வீட்டுக்கு வந்தால், பள்ளியில் சேர்க்கிறேன்’ என்று சொன்ன அத்தை, திருமணத்துக்கு முன்பே என்னைத் தன் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார். அங்கேதான் நான் ப்ளஸ் ஒன் படித்தேன்.
அரையாண்டுத் தேர்வு முடிந்ததும் ஜனவரியில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து ஒரு வாரத்தில் மீண்டும் பள்ளிக்குச் சென்றேன்.
வகுப்பாசிரியர் மூலமாக என் கல்யாண விஷயம் வகுப்பு முழுக்கத் தெரிந்துவிட்டது. என் தோழிகள் எல்லோருக்குமே ‘ஒரு பெண் கல்யாணத்துக்குப் பிறகு ஏன் படிக்க வேண்டும்?’ என்கிற கேள்வி எழுந்ததைக் கவனித்தேன்.  காரணம், திருமணம் என்பது கல்விக்கான முற்றுப்புள்ளியாகவே நாங்கள் நினைத்திருந்தோம். அப்படித்தான் எங்களுக்குக் கற்றுத் தரப்பட்டது.
பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வின்போது நான் கருத்தரித்தேன். தேர்வில் கவனம் செலுத்த முடியாத அளவுக்கு உடல்நலக் குறைபாடுகள். பள்ளியில் `காய்ச்சல்’ எனச் சொல்வேன். அடிக்கடி வாந்தியும் மயக்கமும் என்னை வாட்டி எடுக்கும். அந்த நேரத்தில்தான் மகப்பேறு மருத்துவர் நித்யா ஸ்ரீவத்சனைச் சந்தித்தேன். மூன்றாவது மாதத்துக்கான மருந்துகளைக் கொடுத்துவிட்டு, தடுப்பூசி விவரங்களைச் சொன்னார். ‘எல்லாத்தையும் சகஜமாக எடுத்துக்கோ. படிப்பை மட்டும் விட்டுடாதே’ என்று மருத்துவர் என்னை உற்சாகப்படுத்தினார். இப்போதும்கூட என்னையும் என் எழுத்துகளையும் தாங்குபவர் மருத்துவர் நித்யா ஸ்ரீவத்சன்.
பன்னிரண்டாம் வகுப்பில் கணக்குப் பதிவியல் தேர்வைச் சரியாக எழுதவில்லை. தேர்வறையில் ஒரு மணி நேரத்துக்குமேல் கண்விழிக்க இயலாத மயக்கம். ஆசிரியர்கள் எவ்வளவு கேட்டும் நான் சொல்லவில்லை. எப்படிச் சொல்வது எனத் தயக்கம். மதிப்பெண் சான்றிதழை வாங்க பள்ளிக்குச் சென்றபோது, மேடிட்ட வயிற்றைப் பார்த்து வகுப்பாசிரியரும் தோழிகளும் கண்டுபிடித்துவிட்டார்கள்.
`படித்தது போதும். கல்லூரிப் படிப்பெல்லாம் வேண்டாம். இனி குழந்தை பெற்றுக்கொண்டு, அதைப் பார்த்துக்கொள்’ என்றார் அத்தை. ஆனால், என் பிடிவாதம் மீண்டும் தொடர்ந்தது.  மெரினாவுக்கு ஒவ்வொரு முறை செல்லும்போதும் `இதுதான் நான் படிக்கப்போகும் கல்லூரி’ என்று கனவு காண்பேன். கனவு கண்ட மாநிலக் கல்லூரியிலேயே அடம்பிடித்து இடம் பிடித்தேன்.
கர்ப்பிணியாக, பெரிய வயிற்றோடுதான் கல்லூரிக்குள் நுழைந்தேன். முதல்நாள் பள்ளிக்குப் போனபோது பெரிய வயிற்றோடு இருக்கும் என்னை `மாணவியா… பகுதி நேர ஆசிரியரா?’ என்கிற ஐயத்தோடு பார்த்தார்கள்.
எங்கள் கல்லூரியின் மதில்சுவரில் அமர்ந்துகொண்டு கானா பாடல் பாடிய மாணவர்களிடம் எப்போதும் கிண்டலுக்கு ஆளாவேன். திருமணமான பெண் அதுவும் கர்ப்பமான பெண் கல்லூரிக்கு வருவதை அந்த இளைஞர்கள் முதன்முறையாக எதிர்கொண்டனர். அதை மோசமான கேலியின் வழியாகவே வெளிப்படுத்தினர்.
சில மாணவர்களுக்கு, தாய்மை குறித்த கேள்விகள் எழும். `கையிலயோ பையிலயோ வெயிட் இருந்தா தூக்கிக்கிட்டே இருக்க எவ்ளோ கஷ்டம். வயித்துல எப்பவுமே வெயிட் இருக்கே, வலிக்காதா? இப்ப பாப்பா என்ன செஞ்சிக்கிட்டிருக்கும்? நீ தூங்கும்போது அதுவும் தூங்கி, நீ எழுந்துக்கும்போது முழிச்சுக்குமா?’ இப்படியான கேள்விகள். என்னதான் கேலியும் கிண்டலுமாக இருந்தாலும், அதில் ஓர் அறியாமை இருக்கும். ஆனால், இவர்கள் கானா கட்டி பாடும்போது எதுகை மோனைக்காக `இவளோ குட்ட… வயிறோ முட்ட!’ என்று முடித்து விசில் அடிப்பார்கள்.
நான் அவர்களை என் மனவலிமையின் வழியே எதிர்கொண்டேன். அதற்குக் காரணம், நான் படித்தது இருபாலர் பள்ளி. சிறுவயதிலிருந்தே ஆண்களோடு நெருங்கிப் பழக முடிந்ததால், அவர்களை எதிர்கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கங்களும் இல்லை. கிண்டல் செய்த இளைஞர்களைப் பின்னாளில் நண்பர்களாக்கிக் கொள்ளவும் உதவியது, பள்ளி கற்றுத்தந்த ஆண்-பெண் புரிதல்தான்.
இன்று இருபாலினரும் பேசினால் குற்றம் என நினைக்கும் கல்விக்கூடங்கள் அதிகரித்துவிட்டன. பாலியல் குறித்தும் பாலினம் குறித்துமான புரிதல்களை ஏற்படுத்தவேண்டிய கல்விச்சாலைகளே இன்று ஆண்-பெண் புரிதலற்றச் சூழலை உருவாக்கும் இடங்களாக மாறிவிட்டன. `நீ ஆண், நான் பெண்’ என்கிற பிரக்ஞை இல்லாமல் நட்பு இயல்பாக அமையும் சூழலை, இந்தச் சமூகத்தில் வளர்த்தெடுக்க வேண்டும்.
ஆண்-பெண் புரிதலை ஆணும் பெண்ணும் இணைந்துதான் கற்றுக் கொள்ள முடியும். அப்படிப்பட்ட இடங்களாகத்தான் நம்முடைய பள்ளிகள் பரிணமிக்க வேண்டும். ஆனால், அவை பின்னோக்கிப் பயணிக்கின்றன. பாலினச் சமத்துவத்தை, ஒன்றாம் வகுப்பு முதலே பாடத்திட்டங்கள் வலியுறுத்த வேண்டும். பாலின வேறுபாட்டை உருவாக்கும் விஷயங்கள் இல்லாமல் கற்றல், கற்பித்தல் நடைபெற வேண்டும்.
என்னுடைய  மாணவி அவள். மிக நன்றாகப் படிப்பவள். அப்பா இல்லாத பெண். எப்போதும் துறுதுறுவென இருப்பாள். ‘வீட்டுவேலை செய்து அண்ணனையும் என்னையும் அம்மா படிக்கவைக்கிறாங்க. படிச்சு நல்ல வேலைக்குப் போகணும்’ என்பாள். படிப்பிலும் விளையாட்டிலும் சுட்டியான அவள், திடீரென வித்தியாசமாக நடந்துகொண்டாள். மிகவும் சோர்வாகக் காணப்பட்டாள். சரியாகச் சாப்பிடுகிறாளா எனக் கவனித்தேன். பேரீச்சம்பழம் வாங்கிக் கொடுத்து தினமும் சாப்பிடச் சொன்னேன். ரத்தச்சோகை என்றால், உடல் வெளுக்கும். இவளுக்கு முகம் கறுத்தது. ஆளே ஒருமாதிரி ஆகிவிட்டாள்.
அவளின் அம்மாவை வரவழைத்துப் பேசினேன். ‘ஒண்ணுமில்லை… புள்ள சரியாச் சாப்பிட மாட்டேன்னுது’ என்று மட்டும் அந்தத் தாய் சொன்னார்.  ஆனால், ஏதோ ஒரு பெரிய பிரச்னையில் அந்தப்பெண் சிக்கியிருக்கிறாள் என்பதை உணர்ந்தேன். அந்த மாணவியிடம் தொடர்ந்து பேசினேன். கடைசியில் அவள் பேசினாள்.
தான் சந்தித்த கொடூரமான அனுபவங்களை மெல்லிய குரலில் விவரிக்க ஆரம்பித்தாள். அவள் நிம்மதியாகத் தூங்கி ஒரு மாதம் ஆகிறது. ஒவ்வோர் இரவையும் திகிலுடன் கழித்திருக்கிறாள். அவளின் சொந்த அண்ணனே அவளைப் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கியுள்ளான். அதைக் கேட்டு நான் அதிர்ந்துபோனேன். அம்மா உறங்கிய பிறகு, தன் தங்கையைச் சீண்ட ஆரம்பித்துள்ளான். அம்மாவிடம் சொன்னால் பிரச்னை வருமோ என அம்மாவிடம்கூடச் சொல்லாமல் தவிர்த்திருக்கிறாள்.
ஒவ்வோர் இரவும் இந்தப் பிரச்னை தொடர்ந்துள்ளது. தினம் தினம் தன்னைத் தற்காத்துக்கொள்ள அந்தப் பிஞ்சுக் குழந்தை போராடியிருக்கிறது. இதையெல்லாம் கேள்விப்பட்ட பிறகு, அவள் அம்மாவை மீண்டும் அழைத்துப் பேசினேன். அவள் வெடித்து அழுதாள். காவல்துறை வரைக்கும் செல்ல வேண்டியதாக இருந்தது.
அந்தக் குழந்தை ஆரம்பத்திலேயே அம்மாவிடம் சொல்லியிருக்கலாம். அதற்கான வெளி நம் வீடுகளில் இருக்கிறதா? குழந்தைகள், பெற்றோரிடம் எதையும் வெளிப்படையாகப் பேச முடியும் என நினைக்கும் அளவுக்குப் பெற்றோர் நண்பர்களாக இருக்க வேண்டும். ஆனால், வீடுகள் எப்போதும் கண்டிக்கும் இடங்களாக மட்டும்தான் இருக்கின்றன. பள்ளிகள், அந்தக் கண்டிப்பின் தொடர்ச்சியாக மாறிவிட்டன.
வெளிப்படையாகப் பேசும் போதுதான் இப்படியான நடத்தைகள் தொடராமல் குறைக்க முடியும். பெற்றோர்கள், குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப எச்சரிக்கை உணர்வை ஊட்ட வேண்டும். பெற்றோர்களுக்கு இணையாக மாணவர்களோடு நெருக்கமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள். வகுப்பறையில் பாடம் நடத்திவிட்டுக் கடந்து சென்றுவிடும் வேலை அல்ல ஆசிரியப் பணி. ஒவ்வொரு குழந்தையையும் தாயாக அரவணைக்கும் மனம் இருந்தால், பல பிரச்னைகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்க முடியும்.
ஒரு வீட்டுவிலங்கைப் பழக்குவதைப் போலத்தான், வீடு அது உருவாக்கும் மனிதர்களையும் பழக்குகிறது. பெண்ணுக்கு எதுவும் தெரியாது எனும் மனநிலை கட்டமைக்கப்படுவது அங்கேதான். சமூகப் பங்கேற்பில் பொது வெளிக்கு வரத் தடை ஏற்படுத்துகிறது. அதைப் பெண்ணே மற்றொரு பெண்ணுக்கு உபதேசித்து பயிற்சி வழங்கச் செய்கிறது.
இதை ஆணாதிக்கம், குடும்ப அமைப்பின் மூலமாகப் பெண்களை சமூகப் பொறுப்பிலிருந்து புறக்கணிக்கப் பயன்படுத்துகிறது. இதை நுட்பமாகப் புரிந்துகொண்ட பெண்கள், சமூகப் பங்களிப்பில் தங்களை இணைத்துக் கொள்ளாமல் இருக்க மாட்டார்கள். ஆனால், பெண்களுக்குள் ஆணாதிக்கம் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு அவர்கள் வெளிப்படுவதற்குத் தடையாக இருக்கிறது.
`அன்புள்ள மார்க்ஸ்’ என்கிற ஷீலா ரௌபாத்தம் எழுதிய நூல் மார்க்ஸியத்தில் பெண்களின் போதாமையான இடம் குறித்து விசாரணை செய்கிறது. மார்க்ஸ் அளவுக்கு ஜென்னி செயல்பட முடிய வில்லை.  மார்க்ஸின் மனைவியே ஆனாலும் குடும்பமும் குழந்தைப் பராமரிப்பும் அவரைச் செயல்பட விடவில்லை. பொதுவெளியில் இயங்குதல் என்பது, தலைமைத்துவம் வாய்ந்தவரின் மனைவியாக இருந்தாலும் கடினமானதே.
ஆண்கள் இல்லாமல் வாழ்க்கைப் பயணம் இல்லை. நாம் முன்னெடுக்க வேண்டிய மாற்றம், ஆண்களைப் புறக்கணித்துவிட்டு வாழ்வது அல்ல; அவர்களோடு இயைந்து வாழ்வதே. இங்கே ஒரு பாலினரை `வேண்டாம்’ எனச் சொல்வதால் எதுவும் நடக்காது.
பெண்ணியவாதிகள் என்றாலே, ஆண்களை எதிர்ப்பவர்கள் என்ற புரிதலில் ஆங்காங்கே கூச்சல் தொடர்ந்து எழுப்பப்படுகிறது. பெண்ணியம் பேசினால் சமூகக் கேடாகப் பார்ப்பதும், பெண் உரிமையைப் பேசினால் அது பெண்கள் விருப்பம்போல குடிக்கவும், சிகரெட் பிடிக்கவும்தான் என்பதாகத் திரித்துப் பேசுவதும் நடக்கின்றன. பெண்களை எதிரியாகப் பார்க்கும் மன இயல்புதான் இதற்குக் காரணம். உரிமைக்கும் சீரழிவுக் கலாசாரத்துக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்ளாத நிலை.
உரிமைக்குக் குரல் கொடுத்தால் உச்சபட்சமாகக் குடியை நோக்கிப் போவார்கள் என்கிற ஆணாதிக்கக் கருத்தியலின் பொதுப்புத்தி இப்படிச் சொல்லவைக்கிறது. இப்படியான புரிதல்களில் இருபாலினரும் தெளிவடைய வேண்டும். உழைக்கும் மகளிருக்கு ஆண்களுக்கு இணையான கூலி, ஓட்டுரிமை, அரசியலில் சரிசமமான வாய்ப்பு, கருத்துரிமை என்பதான இன்னபிற அடிப்படை உரிமைகளுக்காகப் பண்பாட்டில் சீர்திருத்தவேண்டிய விஷயங்களில் சமத்துவம் வேண்டுவதே உண்மையான பெண்ணுரிமை.
 அம்பேத்கரும் பெரியாரும் இந்நிலம் சார்ந்து பண்பாட்டின் நச்சுவிதைகளைத் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டி சமூக விழிப்புஉணர்வும் மாற்றமும்தான் அவசியம் எனச் செயல்பட்டார்கள். `மற்றவர்கள் உங்களிடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அப்படி நீங்கள் மற்றவர்களிடம் நடந்துகொள்வதற்குப் பெயர்தான் ஒழுக்கம்’ என்று ஒழுக்கத்தை வரையறுத்தார் பெரியார். ஆனால், ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒருநீதி என்கிற பாகுபாடு, ஒழுக்கத்தின் மீதுதான் இங்கே மிக வலிமையாகக் கட்டப்பட்டிருக்கிறது.
எமக்கு என்று
சொற்கள் இல்லை
மொழி எம்மை
இணைத்துக்கொள்வதுமில்லை
உமது கவிதைகளில்
யாம் இல்லை
எனக்கென்று சரித்திரமில்லை
நீங்கள் கற்றுத்தந்ததே நான்
– என்கிற கனிமொழியின் கவிதை மிக முக்கியமானது.
நம் சமூகத்தில் நிலவி வந்த/வரும் தொடர்ச்சியான பால் பேதத்தை மொழி நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது. சூர்ப்பணகையின் பேராசைக்கு மூக்கறுத்ததாகச் சொல்லும் ஆணாதிக்கம், சீதையின் தீக்குளிப்பையும் நடத்தியது. நவீன சோதனைமுறைகள் அப்போது இருந்திருந்தால், சீதையை ராவணன் வன்புணர்வு செய்தானா என மருத்துவப் பரிசோதனை நடத்தியிருக்கும். வன்புணர்ந்தவனைத் தண்டிக்காமல் பாதிக்கப்பட்டவளைத் தண்டிக்கும் ஆணாதிக்கத்தின் அவமானம் தாங்காமல் சீதை தற்கொலை செய்துகொண்டிருப்பாள்.
பாலியல் கல்வியும் இருபாலர் பயிலும் பள்ளிகளும் இல்லாமல் இரு பாலினரையும் பிரித்துவைப்பதுதான் பாதுகாப்பு எனக் கருதுகிறவர்கள்தான், கல்லூரியிலும் பிரித்துவைக்கிற கல்லூரிதான் நல்ல கல்லூரி என அக்மார்க் முத்திரை குத்துகிறார்கள். விபரீதங்களையும் விளைவுகளையும் அறியாமல் எப்படி இயற்கையை வீணடிக்கிறோமோ, அதுபோல்தானே சக உயிரியான எதிர் பாலினரைப் புரிந்துகொள்ளாமல் வளர்வதும். இந்தச் சமூகத்தில் வளரும் மாபெரும் விஷ விருட்சத்துக்கு உரம் போட்டுக் கொண்டிருக்கிறோம்.
 நம்மைச் சுற்றி இருக்கும் நாகரிகம், சமூகம், ஊர்-உலகம் சொல்பவை என எல்லாவற்றையும் மறந்துவிட்டு ஒரு நிமிடம் கண்களை மூடிச் சிந்தித்துப்பாருங்கள். இரு வேறு பாலினம், உடலால் வேறுபட்டது; பண்பாட்டால் எல்லா வகைகளிலும் வேறுபாடற்றது என உங்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனாலும், சில நொடிகளுக்கு மேல் அதில் நீடிக்க முடியாது. நாம் விரும்பியோ விரும்பாமலோ நம் மூளைக்குள் பாலினம் குறித்து மாறுபட்ட கருத்துகள் திணிக்கப்பட்டுவிட்டன. அதைக் களையெடுப்பது நம் ஒவ்வொருவர் கையிலும் உள்ளது. நாம் நினைக்காமல் நம்மைச் சுத்தப்படுத்த முடியாது. வீடுகளிலும், பணிபுரியும் இடங்களிலும், விழாக்களிலும் வெளிப்படையான கலந்துரையாடலை நடத்துவது சமூகத்தில் புரிதலை ஏற்படுத்த உதவும்.
கொரிய  எழுத்தாளர் சோங் ஹ்யோன் – ஜோங்கின் கவிதையில் இருக்கிறது நமக்கான வெளிச்சம்…
இன்பம் பிணைக்கிறது உடல்களை…
வலி பிணைக்கிறது ஆன்மாக்களை!
– வெளிச்சம் பாய்ச்சுவோம்…
அப்பா… விடுதலை!
களிப்பூட்டும் தளைநீக்கம்!
கோணலான மூன்றிலிருந்து
தளைநீக்கம் –
உரல் உலக்கை கூன்கணவனிடமிருந்து விடுதலை.
பிறவித்துயர் சாக்காட்டிலிருந்து தளைநீக்கம்.
என்னைப் பின்னிழுத்தவற்றை வீசி எறிந்தாயிற்று!
–  முக்தா
(பாலியிலிருந்து தமிழில் அ.மங்கை)
நண்பர்கள் என்றவர்கள்
காதலர்களாகியிருக்கிறார்கள்
எனக்குத் தெரிய அண்ணன்-தங்கை என்று
ஆரம்பித்தவர்களே
கணவன்-மனைவியாகவும்
ஆகியிருக்கிறார்கள்
ஆனாலும் சொல்கிறேன்
நட்பு என்பது நம்மைப்போல் என்றும்
நட்பாகவே இருப்பதுதான்!
– அறிவுமதி
அன்புக்குரியவளே, இந்தப் போராட்டத்தில் நான் இறக்க நேர்ந்தால், அந்த இறுதித் தருணத்தில் உன்னைப் பற்றித்தான் நினைத்துக்கொண்டிருப்பேன்.
– சேகுவாரா
Vikatan.com
Posted Date : 06:00 (01/06/2017)
 படங்கள்: சி.சுரேஷ் பாபு