மூசாவின் தாழி


6547845113_45825d00a6_bவெளிவரவிருக்கும் தொகுப்புக் கதையின் சிறுபகுதி

அத்தர் மணமும், ரோஜாக்கள் நறுமணமும் கூடைக்கூடையாக மூக்கில் ஏறி வதைத்தது. கிராம்பு, ஏலம், லவங்கம், நறுமண பட்டை, கிளேரியா இலைகள், யூக்ளிபட்டாஸ் இலைகள் வந்திறங்கின. சுமக்க முடியா சுமையுடன் கழுதைகள் தளர்ந்து நடந்தன. மேய்ப்பவர்களும் கண்கள் சொருக கிறங்கி நடந்தனர். தங்கள்  மன்னன் இறக்கப்போகிற  நேரம் நெருங்கிவிட்டதென உறுதிசெய்து விட்டு  நகர்ந்தனர்.

சாமானிய  மக்களுக்கு சாவு வந்தால் வழக்கம் போல சாதாரணமாக அலட்சியப் படுத்தி கடந்து விடுவர். அவர்களது சடலங்களை ஓரிரு நாட்கள் வைத்திருந்து சடங்குகளை செய்வதோடு இக்குடும்பதினர் மூன்றாம் தர பதப்படுத்தலை செய்து கொள்ளும் பழக்கமுடையவராயிருந்தனர். இவர்கள் சாதாரணமாக உடல்களை அடக்கம் செய்வதனை விரும்பாதவர்கள். உடைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போன்றே உடல்களையும் பொக்கிஷமென பாதுகாத்தனர்.

கிடங்கிற்குள் ஏவிக்கொண்டிருந்த மூசாவிடம் தைலம் தயாரிப்பவன் கேட்டான் “மேன்மை பொருந்தியவரே எதன்பொருட்டாக இதையெல்லாம் செய்கிறோம்” சுற்றியிருந்தவர்கள் இவன் கேள்வி கேட்பதே தவறு என்பதுபோல் பார்த்தார்கள் . மேன்மை பொருந்தியவன் புன்னகைத்தான்.

”ஒரு சடலத்தைப் பதப்படுத்துவதற்கான முன்னேற்பாட்டினை செய்கிறோம் மகனே”   வேலைக்குப் புதிய அவனின் துணிவு பிடித்திருந்தது.அவரிடம் கேள்விகேட்க பயப்படுபவர்களையும் கேட்டாலும் கண் நிறைய பயத்தோடும் இருப்பவர்களைப் பார்த்துச் சலித்துவிட்டிருந்தவருக்கு உற்சாகம் மிகுந்தது. தன் தொழிலுக்கு வாரிசு இல்லை என்கிற கவலையும் தோதான ஆள் கிடைக்கும் பட்சத்தில் அதனை சொல்லிக்கொடுத்துவிடும் மனநிலையிலுமிருந்தார்.

பதப்படுத்துவது தேவையற்றது என்பது என்கருத்து ,இத்தனை அரிதான பொருட்களை வீணடிக்கிறோம் .தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்றவனிடம் ”தாஹிர் பதப்படுத்துவதை நான் கலையாகப் பார்க்கிறேன், பொருள்விரயம் என நினப்பது புரிகிறது இருந்தாலும் கலைகள் வளரும் பாதை இப்படித் தானே பட்டினி கிடப்பவர்கள் ஒருபக்கமிருந்தாலும் இந்த கலை தொழிலாக பல குடும்பங்களின் பசிதீர்க்கிறது .நீயும் அப்படி வந்தவன் தான் என்பதை மறந்து விடாதே” மேலும் மூசாவிடம் பேச அவகாசமில்லாததால் தாஹிர் வேலைகளில் தீவிரமானான்.

பண்டங்களை சுமந்து விற்றுக் கொண்டிருந்த வியாபாரிகளின்  புத்துணர்விற்குமுன்  சுள்ளென்ற காலைச்சூரியன் தோற்றுக் கொண்டிருந்தது..சிந்துநதிக்கழிமுகத்தில் இருந்த பார்பரிகத்துறைமுகத்திலிருந்து வந்த மெல்லியதுணிகளுக்கு மக்கள் மத்தியில் மதிப்பு அதிகம் .

அந்தவணிகர்களுக்கு இயல்புக்கு மீறியதொரு ஆர்வம் எதனாலோ ஏற்பட்டிருந்தது .அவர்களின் அருகாமையிலிருந்த தாஹிர் சுயநினைவு வந்தவனாக வியாபாரிகளைப் பார்த்து “ உங்களிடமிருக்கும் பத்திரி ,வெள்ளை போளம்,சிவப்பு போளம் ,கரியபோளம் முதலான பொருட்களையும் ஜாதிக்காய் கடுக்காய் போன்றவற்றையும் பதனப்படுத்து மிடத்திற்கு கொண்டுவரச் சொல்லப்பட்டிருக்கிறது சிறிதும் தாமதிக்காமல் வாருங்கள் என சொல்லிவிட்டு குதிரையின் மேல் ஏறியமர்ந்து விரட்டினான்.

குதிரையை நிழலில் கட்டிவைத்து வந்தவனுக்கு அங்கிருந்த நறுமணப்பொருட்களையும் மீறி வீச்சமடித்தது.வரிசைப்பொருட்களை இறக்கிவைத்துக் கொண்டிருந்த பணியாட்களில் ஒருவன் முறைப்படி வணங்கி ஏற்றுக்கொள்ளும்படி கூறினான்.பொற்காசுகளும் மணிகளும் நீலக் கற்களுமாயிருந்த அவற்றினை ஏற்பதான பாவத்தை செய்துவிட்டு ”மகனே தாஹிர் இவற்றை எடுத்துவை! வியாபாரிகள் வருகிறார்களா? அகில் சந்தனமென அனைத்தையும் கொண்டுவரச் சொன்னாயா?”கேட்டவண்ணம் மற்றொரு சவத்தை நெருங்கினார்.

”மகனே பார்த்தாயா கொடுக்கப்படும் செல்வத்திற்கேற்ப இங்கும் பேதம் .தரம் பிரிக்க வேண்டியிருக்கிறது சவத்தின்பல ஆண்டு பாதுகாப்பெனப்படுவது அதற்குரியவற்றை தாராளமாக செலவு செய்வதுதான்.பணமில்லையென்றால் உடல் பாகங்களைக் கத்தியால் கீறி தைத்து கொப்பறையில் போடுகிறோம். முதல் தரமெனில் கத்தியை பிணத்தின் மீது வைக்காத வேறு சில முறைகளை பயன்படுத்துகிறோம்.” பேசிக்கொண்டே அவரது கைமருந்துப் பொருட்களையும் வாசனை திரவியங்களையும் சரிபார்த்தது.

தாஹிர் இதுவரை முதல்தரமான சடலப் பாதுகாப்பை பார்த்ததில்லை .மிக அரிதாகவே இப்படியான சந்தர்ப்பங்கள் வாய்க்கும்.மிகுந்த பாதுகாப்புடனும் அரசமரியாதையுடனும் சிலமணிநேரத்தில் வந்திறங்கிய உடலை பயபக்தியோடு பார்க்க கூடியிருந்த பொதுமக்களில் பெண்களும் கணிசமாயிருந்தார்கள்