போர்ச்சூழலில் பெண்-2


ஹிட்லரின் உயிருக்கு பாதுகாப்பில்லை அவருக்கான உணவில் விஷம் கலந்திருந்த நடவடிக்கையில் அவரது ஒவ்வொரு வேளை உணவையும் சாப்பிட்டு பரிசோதிக்க ஒரே பெண்ணை கட்டாயமாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.இப்படியான தொடர் அனுபவங்களால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உயிரச்சம் சார்ந்த அவலம் சொல்லொணாதது. உலகமெங்கிலும் எல்லைக்கோடுகளுக்கு 
மத்தியிலும் உள்ளுமாக பல்வேறு தாக்குதல்கள் தொடர்ந்து 
நடைபெற்று வருகிறது.இவை போர் என்னும் பொதுச்சொல்லாக வழங்கப்பட்டாலும் அவற்றுக்கான காரணங்களாக பல கூறப்பட்டாலும் எல்லா போர்களும் மண்ணை குருதியால் 
நனைக்கின்றன.நீர்பாய்ச்சி பசுமையாக்க வேண்டிய 
பகுதிகளை குருதியால் குளிப்பாட்டுகின்றனர்.

ஏகாதிபத்தியத்தின் 
போர்,ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போர்,புனிதப்போர் தொடங்கி இனம்,மதம் எனும்  பல்வேறு நுண்கூறுகளாக அதற்குரிய காரணங்களைக் கூறலாம்.ஆயினும் பெண்களைப் பொறுத்த
வரையில் போர் என்பது பெண்களின் மீதும் குழந்தைகள் மீதும் தான் நடத்தப் படுகிறது.மொத்தத்தில் அனைத்து உயிரினங்களும் தாக்கப்பட்டாலும் பால்பேதமற்று மனிதர்கள் 
தாக்கப்பட்டாலும் போர்க்களத்திலிருக்கும் ஆண்பாலினம் உச்சபட்சமான மிருகத்தாக்குதலை மனிதாபிமானமின்றி பெண்கள் மீது நடத்துகிறது.மிருகத்தனமான பாலியல் தேவைக்கும் ,இயற்கையின் இயல்பான இன உற்பத்தி சாதனமாக பெண்கள் பார்க்கப்படுவதால் உச்சபட்சமான தாக்குதலைப் பெண்கள் மீது நிகழ்த்துகின்றனர்.

“பிழைத்திருக்கும் தருணம் என்பது அதிகாரத்தின் தருணமாக இருக்கிறது.இறந்த ஒருவரைப் பார்க்கும் போதுஏற்படும் பீதி 
இறந்து போனவர் யாரோ ஒருவர்தான் என்ற நினைவால் திருப்தியாக மாறுகிறது.” –எலியா கனெட்டி,(அதிகாரத்தின் மூலக்கூறுகள்-ப 16) உயிர் பிழைக்கும் ஒவ்வொருவரும் தப்பித்தோம் என்கிற 
தற்காலிக நிம்மதியையும் அதிகாரத்திற்கு எதிராக ஏதும் செய்ய முடியாமலிருக்கிற நிரந்தரமான குற்றவுணர்வையும் ஏற்படுத்துகிறது.

சார்லிசாப்ளின் “தி கிரேட் டிக்டேட்டர்” என்ற முழுநீள 
திரைப்படத்தை எடுத்தார் .இதுதான் இவரின் முதல் பேசும் படம் .ஹிட்லரை விமர்சித்து நகைச்சுவை உணர்வோடு எடுக்கப்பட்ட படம்.இத்திரைப்படத்தை எடுத்துக்கொண்டிருந்தபோதும் வெளியிட்டபோதும் பல்வேறு தடைகள் எழுந்தன .திரையிட்ட பின் 
மக்கள் ஆதரவு கிடைத்தது.இப்படம் முழுவதும் நாஜிகளின் சர்வாதிகாரத்தை விமர்சித்த போர் எதிர்ப்புப் படமாகும்.ஒரு 
கலைஞன் தன்னை தன் இயலாமையிலிருந்து காப்பாற்றிக்
கொள்ள வேண்டிய தேவையிருக்கிறது.ஏதும் செய்ய முடியவில்லை என்ற இடத்திலிருந்து நகர்ந்து அவனது கலையின் மூலம் 
எழுத்தின் மூலம் தன் விமர்சனத்தை உலகுக்கு அறிவிக்கிறான்.நடைபெறும் போருக்கு முடிவு உண்டு அதன் வலிகளின் மீதும் பாதிப்பின் மீதும் எழும் இலக்கியத்திற்கு முடிவு இல்லை.படைப்புகள் தான் எழுத மறந்த வரலாறாக மக்களின் மனசாட்சியாக 
நின்று பேசிக்கொண்டிருக்கிறது.

ஏகாதிபத்தியம் தன் வளத்திற்காக வலிமைக்காக நிலம்,பொருளாதாரம் இரண்டையும் தன்வசம் வைக்க மதத்தைச் சூழ்ச்சிக்குப் பயன்படுத்துகிறது.ஆனால் இவை அனைத்தும் பெண்களை உயிராகப் பார்க்காமல் அவமதிக்கிறது.மனித்த்தன்மையற்ற முறையில் பெண்ணை நடத்துகிறது வல்லுறவு நாசங்களை அரங்கேற்றுகிறது.ஓலங்களை அதன் வலியை இரசிக்கிறது.ஏகாதிபத்தியம் நிகழ்த்துகிற அத்துணையும் உயிர்களை உயிர்களாக நட்த்துவதில்லை என்பதுதான்.

ஹெய்த்தியின் இன்றைய நிலை முன்னேற்றத்திற்கு உதவுவதான போக்கில் தீராத பொருளாதாரச் சரிவை ஏற்படுத்தியதுடன் வளங்கொழிக்கும் நிலத்தை தரிசாக்குகிறது.உலகநாடுகளின் வளமாகப் பார்க்கப்படும் பயிர் வளங்களுக்கு காப்பீடு செய்துக்கொள்ள அவசரப் படுகிற ஏகாதிபத்தியம் வெள்ளைத்தாள்களில் எழுதப்படும் மையின் மூலமாக அனைவரையும் அனைத்தையும் அடக்கி வசப்படுத்தப் பார்க்கிறது.மற்றொருநிலையில் மரபான விதைப்பாரம்பரியத்தை அழிக்க செய்கிறது.மாற்றுவிதைகளைக் கொடுத்து நூற்றாண்டுகளாக வீரியம் ஏற்றப்பட்ட  பாரம்பரிய விதைமரபை முற்றாக அழிக்க நினைக்கிற நரித்தனத்தை செய்கிறது.

இந்த இடத்தில் சூழலியல் பெண்ணியம் என்கிற கருத்தாக்கம் எத்துணை சரியானது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.கென்யாவில் வங்காரிமாத்தாய் சூழலியல் சார்ந்து ஆற்றிய பணிகளும் சொந்த நாட்டில் ஆரம்பத்தில் ஒடுக்கும் முயற்சிகள் நடந்தது.இந்தியாவில் மணிப்புரில் இரோம் ஷர்மிளா சொந்த மாநிலப் பிரச்சனைக்காக காந்திய முறையில் உண்ணா நோன்பு இருந்து வருகிறார்.குறிப்பாக இராணுவத்தினரின் விசாரணையற்ற துப்பாக்கிசூடு ,பெண்களை மென்று துப்பும் செயல் இதற்காக தொடங்கிய போராட்டத்தை இத்துணை ஆண்டுகளாக நடத்திவந்திருக்கிறார்.அவள் உடல் தளர்ந்து விட்டது.மன உறுதி மட்டும் குறையவே இல்லை இரும்பின் வைரத்தின் உறுதியைக் கொண்டிருக்கிறது.ஆணாதிக்கத்தின் அரசுகளின் ஆதிக்கத்தின் பிடி பெண்களை நடத்துவது இவ்வாறு இருக்க போர்முனையில் பெண் மீதான வன்முறை எண்ணிப் பார்க்கவியலாதது.  

 அனொனிமா எனும் முகமற்றவள் என்கிற புத்தகம்,இரண்டாம் உலகப்போரில் நிலவறையில் பதுங்கி உயிர்காத்துக்கொள்ள ஓடிய நிலையில் எழுதப்பட்ட குறிப்புகள் எல்லா கொலைகளும் ,வன்புணர்வுகளும் ,கருச்சிதைப்புகளும்,
பாலியல்வக்கிரங்களும்,கொள்ளையடிப்புகளும் ’யுத்தமென்றால்’இதெல்லாம் நடக்கும்தானே என்று உதட்டைப் பிதுக்கி கடந்து போக உலகம் பழக்கி இருக்கிறது.ஆனால் அனொனிமா இந்த பொதுப் புத்தியிலிருந்து எதிர் திசையில் மறித்து நிற்கிறாள் .ஏனெனில் அவள் யுத்தத்தின் பார்வையாளராகவோ ,பங்கெடுப்பாளராகவோ இருந்திருக்கவில்லை.யுத்தம் அவள் மீதேதான் நடந்து முடிந்திருக்கிறது. 

ஆண்மை வீரம் போன்ற கற்பிதங்களின் உள்ளீடற்ற பொக்கைத்தனங்களை இரக்கமற்ற மொழியில் குத்திக்காட்டுகிறது.கண்ணுக்குள் பெண்ணை வைத்து காத்து வளர்க்கத்துடிக்கும் ஆணின் கட்டுப் பெட்டித்தனம் மீது காறி உமிழ்கிறது.தன்னளவில் சுயமாய் வாழ்வதற்கான பெண்ணின் விழைவுகளை முன் மொழிகிறது.மான அவமான மயக்கங்களில் சிக்கி வாழ்வைத்தொலைக்கிற கோழைத்தனத்திலிருந்து விடுபட்டு ஒவ்வொரு நொடியையும் வாழ்ந்து பார்ப்பதற்கான வேட்கையை மூட்டுவதாக கூறப்பட்டிருப்பது போலவே இக்குறிப்புகள்

அக்கால சூழலை,உணவு சேமிக்க வேண்டிய கட்டாயம்,அலைக்கழிவு,எதிரிகளின் கொடுமை,தண்ணீர் பிரச்சனை,வானத்தின் கீழான பாதுகாப்பற்ற வாழ்க்கை,வல்லுறவு யாரென தெரியாத பலரும்   வயது வித்தியாசமில்லாமல் பயன்படுத்தி சக்கையென போடுவது,உணவுக்காக காத்திருந்து பெறுவது,சூறையாடி கடைகளிலிருந்து கொண்டுபோவது நிலவறையும் பாதுகாப்பின்றி போனதால் வீட்டின் பரண்களில் சிறுமிகளைப் பதுக்குவது இப்படியான மோசமான எல்லா போர்நிலத்திற்கான பதிவாக வெளிப்படுகிறது.

 கடந்த இருபது ஆண்டுகளில் பனிப்போருக்குப் பின்பாக 45 போர்ச்சூழ்நிலைகள் உருவானபோது அதைத் தடுக்க 300 அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.அதில் 10 போர்சூழலில்  (புருண்டி, காங்கோ, 
சூடான், பிலிப்பைன்ஸ் , நேபால், உகாண்டா, குவாத்தமாலா, 
மற்றும் சியாபாஸ் முதலான 18 இடங்களில் பாலியல் வன்முறை நிகழ்ந்ததாக பதிவாகியுள்ளன.

துயருற்ற என் தேசமே
காதல்கவிதைகள் எழுதும் கவிஞனான 
என்னை ஒரு நொடியில்
கத்தியினால் கவிதை எழுதும்
கவிஞனாக மாற்றினாய்
 –நிசார் கப்பானி
அரபுக்கவிஞர் இப்படி வாழ்க்கை திட்டமிடமுடியாததாக போரின் போக்குகளால் சொந்த இயல்பை இழந்து ஓட வேண்டியவராகின்றனர்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.