Modern Poetry Translation (England) இதழில் வனதேவதை


கடந்த 50 ஆண்டுகளாக இங்கிலாந்திலிருந்து வெளிவரும் கவிதைக்கான மற்றும் கவிதை சார்ந்த பட்டறைகளை நடத்தி வரும் காலாண்டு இதழ் MPT . Creative Writing படித்த பெண்கவிஞர்கள் எழுத்தாளர்கள் CLARE POLLARD தலைமையில் நடத்தி வரும் கவிதைக்கான உலக இதழ் இது .

இதில் தமிழில் எழுதப்பட்ட வனதேவதை எனும் எம் கவிதை,
திலா வர்க்கிஸ் அவர்களால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப் பட்டு வெளியாகியுள்ளது என்பதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் .

இந்த மொழியாக்கம் தமிழ் கவிதைக்கு கிடைத்த அங்கீகாரமாகும்.

ஆங்கில மொழியாக்க பிரதியும் அடுத்து எம் தமிழ்க்கவிதையுமாக கீழே கொடுத்திருக்கிறோம். வாசித்து விட்டு கருத்துக்களை பின்னூட்டமாக இடுங்கள் .

வனதேவதை
ச. விசயலட்சுமி

(1)

காய்த்துத்தொங்குகிற கனிகளோடு கிளிகளும் அணில்களும்
பேசி விளையாடிய மஞ்சள் வெயிலற்ற குளிர்ப் பொழுதொன்றில்
நிகழ்ந்த மலர்ச்சியில் அடிவயிறு வலித்தது
வனத்தின் அத்தனை வாசமும் என்மீது வீச
பச்சைக்கூரைகளால் ஆனவென் குடில்
புத்தம்புதிதாய் வனையப்பட்டது
எங்கிருந்தோவந்த துக்கசேதியின்
பேரதிர்வுபோல என்னைப்பார்த்தாள் அம்மா
அவளது அணைப்பும் முத்தமும் வற்றிப்போக
நான் வனதேவதையானது காரணமோ
என் அம்மா உன்னில் கமழ்கிற
காட்டாமணக்கு மணம் எனக்கானது
என்னில் கிளைத்த மலைகள் பூக்களை ஈன்றன
காடுகளில் நீரோட்டம் கட்டற்றதாய் பெருகியது
உன் நிலம் போன்றதே என் நிலம்

(2)

செழுமையை எனக்கு கொடையளித்தாய்
என்னில் நீந்திய உயிர்களுக்கான
உணவுகளைப் பங்கிட்ட நாளொன்றில்
பழங்குகைகளில் தீட்டப்பட்ட உன்னுருவம் போலிருந்தேன்
பச்சைநிற சாந்துகளால் வண்ணமிட்ட நாளொன்றில்
காணாமல் போயிருந்த உன் காணி
தீரா அலைச்சலுடன் உன்னை நாடுகடத்தியது
இன்று என்முறை என் உடலிலும் வனதேவதையின்
வாசம் கண்டு விலகுகிறாய்
நான் தேர்ந்தெடுத்த தானியங்களை
விளையச்செய்கிற அதிகாரம் யாருக்கு?
அடர் இருட்போதொன்றில் என் குடிசைகள் நாசமாகிறது
குருதி வடிகிற என் காடு மலை மீதான அத்தனை செயலும்
புனிதத்தின் ஆன்மாவாக போதிக்கப்படுகிறது

(3)

கரளைக்கற்களாலான பாதையில்
சதாவிழும் வேட்டுச்சத்தமும் வாகனமும்
என் பாதுகாப்புக்கென்ற பெயரில் தருவிக்கப்பட்டது
மீண்டும் மீண்டும் குருதி நிற்காமல்
வடியும்மாறு பண்ணினவர்கள் என் கருவறையை
ஆயுதம் கொண்டு தாக்குகிறார்கள்
அவர்களின் சட்டங்களைக்கொண்டு
அவர்களின் நியாயங்களை
எனக்கானதென ஒப்புக்கொள்ள செய்கிறார்கள்
என் விதைகளை விளைச்சலை கபளீகரம் செய்கிறவர்கள்
விசுவாசத்தை போதித்துக்கொண்டு
விடுதலையை அபகரிக்கிறவர்கள்
மூச்சுக்காற்றிலும் பருகும் நீரிலும் வாழும் பாதையிலும்
வனையப்பட்டிருக்கிற சிறைக்கம்பிகளை
சுமந்தபடி வாழ்கிற என் குழந்தைகள் மீது
ஆகாயத்திற்கும் பூமிக்குமான அர்த்தம் விலக்கப்பட்ட
அகராதிகளைகளை போர்த்தியிருக்கிறார்கள்

(4)

வணிகத்தின் மூலதனமாக்கிவிட்ட என்னை
அரியாசனத்தின் சுழல் நாற்காலிக்கு அடியில் வைக்கப்பட்ட
என் தலைகளை விசுவாசத்திற்கு
பழகிவிட்டதாக கருதுகிற என் கைகளை வைத்து
என்குழந்தைகளின் மீது பேரழிவை செலுத்த
பேரம் பேசுகிறாய்
வலிப்பு வந்த உன் உடலம்
அமிலம்மட்டுமே வீசத்தெரிந்தது
பிரபஞ்சத்தின் மாயத்தனங்களும்
புதிர்த்தன்மையும் அறியாத
உன் காகிதங்கள்
மூங்கிலையோ புல்லாங்குழலையோ தருவிக்காது
வனதேவதையின் வீச்சம் கசிகிற மகரந்த உடலுக்கு முன்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.